இழந்த பெயரை மீட்டெடுப்பாரா கவுதம் கார்த்திக்?

தமிழ்த் திரையுலகத்தில் உள்ள வாரிசு நடிகர்கள் வெற்றி பெற்று வசூல் நாயகர்களாக முன்னேறுவதற்கு தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். பிரபுவின் வாரிசு விக்ரம் பிரபு, கார்த்திக் வாரிசு கவுதம் கார்த்திக், முரளியின் வாரிசு அதர்வா முரளி ஆகியோர் எதிர்பார்த்த இடத்தை இன்னும் அடையவில்லை.

இருப்பினும் இவர்களில் கவுதம் கார்த்திக் ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு ஆபாசப் படங்களில் நடித்து வசூல் ரீதியாக வெற்றியைக் கொடுத்துவிட்டார். இருந்தாலும் அந்த இரண்டு படங்களுமே அவருடைய பெயரை நிறையவே ‘டேமேஜ்’ செய்துவிட்டன. அதைச் சரிக்கட்டவே அவர் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் அவருடைய அப்பா கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்தப் படம் வரும் 6ம் தேதியன்று வெளியாக உள்ளது. கார்த்திக் 80களில் இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகனாக மட்டும் இல்லாமல் பல நல்ல படங்களிலும் நடித்து நல்ல கதாநாயகன் என்ற பெயரை வாங்கியவர். குடும்பத்துடன் அவருடைய படங்களைப் பார்த்து ரசித்தனர்.

ஆனால், கவுதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் அவருடைய இமேஜில் சரியான முரட்டு குத்தை குத்திவிட்டது. அந்தக் குத்தை ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் சரி செய்தால் தான் கவுதம் தொடர்ந்து நல்ல பெயருடன் தமிழ்த் திரையுலகில் நிலைக்க முடியும்.

Sharing is caring!