எதிர்த்தால் அழித்து விடுவேன்

தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணவத். அவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் மணிகர்னிகா. இதன் வசன பகுதிகளை கங்கனாவே இயக்கி உள்ளார். இது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் கதை. தமிழிலும் வெளிவருகிறது. வருகிற 26ந் தேதி குடியரசு தினத்தன்று படம் வெளிவருகிறது. இந்த நிலையில் வட மாநிலத்தில் பரவலாக உள்ள கர்னி சேனா என்ற அமைப்பு படத் தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

அந்த அமைப்பு தயாரிப்பாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் “மணிகர்னிகாக படத்தில் ஜான்சி ராணி ஆங்கிலேயர் ஒருவரை காதலிப்பது போலவும், ஆங்கிலேயர் முன் நடனம் ஆடுவது போலவும் காட்சிகள் இருப்பதாக கேள்விப்படுகிறோம். எங்களுக்கு படத்தை போட்டுக்காட்டி நாங்கள் சொன்ன பிறகே படத்தை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் படத்தை திரையிட விடமாட்டோம்” என்று எழுதியிருந்தார்கள்.

இதற்கு பதில் அளித்து கங்கனா கூறியிருப்பதாவது: மணிகர்னிகா படத்தை தணிக்கை குழு பார்த்து சான்று அளித்துள்ளது. வரலாற்று ஆய்வாளர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளோம். இத்தனைக்கும் பிறகு படத்தை தடை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நானும் ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவள்தான். தேவையில்லாமல் மிரட்டல் விடுத்தால் மிரட்டும் ஒவ்வொருவரையும் அழித்து விடுவேன். இவ்வாறு கூறியுள்ளார்.

கங்கனாவின் இந்த துணிச்சல் கருத்து பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் பிரபலங்கள் கங்கனாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ரசிகர்களும் கங்கனாவுக்கு ஆதரவாக எழுதி வருகிறார்கள்.

Sharing is caring!