எனக்கு எதிராக நிற்கும் மும்பை திரையுலகம்… அதிர்ச்சி கொடுத்த கங்கனா ரணாவத்

மும்பை:
இந்தி திரையுலகம் எனக்கு எதிராக அணி திரண்டு செயல்படுகிறது என்று நடிகை கங்கனாரணாவத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மணிகர்னிகா’. ஜான்சிராணியின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் முதலில் இயக்குனராக பணிபுரிந்த கிரிஷுக்கும் கங்கனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. தன் பெயரை இருட்டடிப்பு செய்ததாக கங்கனா மீது கிரிஷ் குற்றம் சாட்டினார்.

மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் ‘மணிகர்னிகா’ படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. திரையிடல் முடிவில் பேசிய கங்கனா, ’ஒட்டுமொத்த வகுப்பறையும் ஒருவருக்கு எதிராக திரண்டு பயமுறுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்தி திரையுலகம் எனக்கு எதிராக அணி திரண்டு செயல்படுகிறது.

அவர்களுக்கு வெட்கமே இல்லை. இப்படிப்பட்டவர்களிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதை அவர்கள் முகத்துக்கு நேராகவே நான் சொல்கிறேன். சிலர் என் தாத்தா அளவுக்கு வயதானவர்கள். ஆனால் செக்ஸ் சீண்டல், குடும்ப ஆதிக்கம், சம்பள பாகுபாடு என பல்வேறு குறைகள் அவர்களிடம் உள்ளன.

இனியும் நான் அமைதியாக இருக்க போவதில்லை. எல்லோரையும் வெளிப்படையாக அடையாளம் காட்டப் போகிறேன். என்னை அடக்கி ஒடுக்குவதன் மூலம் அவர்கள் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கி இருக்கின்றனர். ஜான்சிராணி போன்ற மாபெரும் வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படத்தை பற்றி பேச இவர்கள் ஏன் தயங்குகின்றனர்?

ஜான்சிராணி என் சொந்தக்காரரா? அவர் தேசத்தில் அனைவருக்கும் சொந்தக்காரரே. நான் இந்தி சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறேன் என்பதாலேயே என்னை எல்லோரும் எதிர்க்கின்றனர்’. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!