எமி ஜாக்சன் காதலரை மணக்கிறார்

2018ம் ஆண்டு இந்தியத் திரையுலகத்தில் இரண்டு முக்கியமான திருமணங்கள் நடைபெற்றன. ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் ஆகியோரது திருமணங்கள் அடுத்தடுத்து நடந்தன. இந்த 2019ம் ஆண்டிலும் சில முக்கியமான திருமணங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதல் திருமணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள ஆங்கிலேயே நடிகையான எமி ஜாக்சன் திருமணம் நடக்கலாம்.

நீண்ட காலமாகவே அவருக்கும் பிசினஸ்மேன் ஆன ஜார்ஜ் பனயிடோவ் என்பவருக்கும் காதல் என்று செய்திகள் வெளிவந்தன. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எமி ஜாக்சனே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

புத்தாண்டைக் கொண்டாட இந்த காதல் ஜோடி ஜாம்பியா நாட்டிற்குச் சென்றுள்ளது. அங்கு ஒரு நீர் வீழ்ச்சியின் பின்னணியில் ஒரு ரொமான்டிக்கான புகைப்படத்தை எமி ஜாக்சன் பகிர்ந்துள்ளார். அதில் “1 ஜனவரி 2019. எங்கள் வாழ்க்கையின் புதிய சாகசம் ஆரம்பம். நான் உங்களைக் காதலிக்கிறேன். இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் என ஆக்கியதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் எமியின் கைவிரல்களில் ஒரு அழகான வைர மோதிரம் ஜொலிக்கிறது. எமியின் கன்னத்தில் காதலர் ஜார்ஜ் முத்தமிடுகிறார். எமி நடித்த ‘2.0’ படம் கடந்த வருடம் நவம்பர் 29ம் தேதி வெளிவந்தது. வேறு எந்த புதிய படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Sharing is caring!