ஏன் நீங்களே சொல்லலாமே? வைரமுத்துவுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

சென்னை:
உண்மையை காலம் சொல்லுமா? ஏன் நீங்களே சொல்லலாமே என்று வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட் போட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

பாடகி சின்மயி 14 வருடங்களுக்கு முன்பு தனக்கு வைரமுத்து மூலம் பாலியல் தொல்லை வந்ததாக கூறியது சினிமா துறையில் உள்ளவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதில் அளித்த வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளதாவது:

“உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ?. சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல. அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!