ஏ.ஆர்.முருகதாஸுக்கு பாராட்டு விழா

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியான ‘சர்க்கார்’ திரைப்படத்தில், அரசியல் காட்சிகள் நிறைய இடம் பெற்றன. தமிழக அரசின் இலவசத் திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் காட்சிகளும் இடம் பெற்றன. இலவசப் பொருட்களை கொண்டு வந்து போட்டு எரிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், முருகதாஸ் மீது, தமிழக அரசு கோபம் அடைந்தது.

இதற்கிடையில், பெரம்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன், தமிழக அரசின் இலவசம் வழங்கும் கொள்கையை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதன் மீது நடவடிக்கை எடுத்த சென்னை போலீசார், நான்கு பிரிவுகளின் கீழ், முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, போலீஸ் தன்னை கைது செய்யும் என முடிவெடுத்த முருகதாஸ், தன் மீது போடப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரித்தது நீதிமன்றம். அப்போது, அரசுத் தரப்பில், ஏ.ஆர்.முருகதாஸ், இனிமேல் அரசையும்; அரசு திட்டங்களையும் விமர்சிக்க மாட்டேன் என எழுதித் தர வேண்டும் என உறுதி மொழி கேட்டனர்.

இதனால், தமிழக அரசு மீது கடும் கோபம் அடைந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசை கடுமையாக விமர்சித்தனர். ‘இப்படியெல்லாம் உறுதி மொழி கேட்பது, தனி மனித உரிமைக்குள் தலையிடும் விஷயம். ஜனநாயக நாட்டில், யாருக்கும் அரசையும், அரசின் கொள்கைகளையும் விமர்சிக்க உரிமை உண்டு’ என கருத்து கூறினர்.

கூடவே, முருகதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துச் சொல்லி வருகின்றனர். கருத்துரிமைக்காக போராடி வெற்றி பெற்றதோடு, சினிமா உலகையும் காப்பாற்றி இருக்கிறீர்கள் என்றும் சொல்லி புகழாரம் சூட்டுகின்றனர். இதற்காக, ஏ.ஆர்.முருகதாஸுக்கு பாராட்டு விழா எடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.

Sharing is caring!