ஓவியாகவே நடித்து வருகிறேன்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆரவ்வும், நடிகை ஓவியாவும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை இருவரும் மறுத்து வருகின்றனர். அதே நேரம், இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வது போன்ற படங்கள் தொடர்ச்சியாக வருகின்றன. இதனால், ‘இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்’ என செய்தி பரவ, அதை இருவரும் மறுத்தனர்.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்வதாக செய்திகள் பரவியுள்ளனர். இதையும் மறுத்துள்ளார் நடிகை ஓவியா. இது குறித்து, ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :

‘ராஜபீமா’ படத்தில் நான் ஓவியாகவே நடித்து வருகிறேன். அந்தப் படத்தில், அந்த வேடம் ஒரு கவுரவ வேடம் தான். அந்த படத்தில், நடிகர் ஆரவ்வுடன் நான் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். அந்தப் பாடலை பாடியிருப்பவரே ஆரவ் தான். அந்த பாடல் முழுக்க முழுக்க என்னை புகழ்ந்து எழுதப்படது தான். ‘ஓவியா ஆர்மி’, ‘பிக்பாஸ் குயின்’ என்றெல்லாம், பாடலில் என்னை வர்ணிப்பது போன்ற வார்த்தைகள் வரும்.

நடிகர் ஆரவ்வை ஒரு நண்பராக எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரம், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்காக ஒரே வீட்டில் நாங்கள் இருவரும் தங்கி இருந்த போது, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நிறைய சண்டை போட்டு இருக்கிறோம். ஆனால், நிகழ்ச்சி முடிந்த கையோடு சமாதானம் ஆகி விட்டோம். இருவரும், பொது நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக சந்தித்துக் கொள்கிறோம். அதற்காக, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்; திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறோம் என்று பரப்பப்படும் எந்த செய்தியிலும் உண்மை இல்லை. அப்படி ஒரு வாழ்க்கை வாழும் பட்சத்தில், யாருக்காகவும் அதை மறைக்கவோ; மறுக்கவோ வேண்டியதில்லை. ஓபனாக நானே அதை சொல்வேன்.

ஆரவ்வைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய நண்பர் என்பதில் எந்த மாற்றும் இல்லை. எனக்கு ஆதரவாக இருக்கிறார். என்னைப் பொறுத்த வரை, எனக்கு ஒரு போதும், திருமணத்தில் நம்பிக்கை கிடையாது. அது என் வாழ்க்கைக்கு தேவையில்லை என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால், வாழ்க்கை யாரை எங்கே கொண்டு சேர்க்கும்னு தெரியாது. திருமண வாழ்க்கை ஒரு போதும் எனக்கு நம்பிக்கை கிடையாது; அதனால், அந்த வாழ்க்கை எனக்கு செட் ஆகவே ஆகாது. அதோட, என் வாழ்க்கைக்கு இன்னொருவர் ஆதரவு தேவையாக இருக்கும்னு தோணலை.

இவ்வாறு ஓவியா கூறியிருக்கிறார்.

Sharing is caring!