‘கஜினிகாந்த்’, ஒரு வருடம் கழித்து ஆர்யா படம்

தமிழ்த் திரையுலகில் பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் நடித்ததற்குப் பிறகு ஆர்யாவுக்கும் நடிக்க வரும் என மற்ற இயக்குனர்களும் நம்பினார்கள். அடுத்து ராஜேஷ் இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் ஆர்யாவை வசூல் ரீதியான நடிகராகவும் உயர்த்தியது. அதன்பிறகு வெளிவந்த படங்களில் ‘ராஜா ராணி’ படம் மட்டுமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

கடந்த 5 வருடங்களாக ஆர்யா நடித்து வெளிவந்த “மீகாமன், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், கடம்பன்” என வெளிவந்த அனைத்து படங்களுமே தோல்வியைத் தழுவியவை.

‘கடம்பன்’ படம் வெளிவந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆர்யா நடித்து முடித்துள்ள ஒரே படமான ‘கஜினிகாந்த்’ படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால், திரையுலக ஸ்டிரைக் காரணமாக தள்ளிப் போனது. இப்போது படம் ஜுலை 27ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்த’ ஆகிய ஆபாசப் படங்களின் இயக்குனரான சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். இருப்பினும் இந்த ‘கஜினிகாந்த்’ படத்தை ஆபாசப் படமாக இல்லாமல் ‘யு’ படமாகத்தான் இயக்கியிருக்கிறார்.

ஆர்யா ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ள இந்தப் படத்தில் கருணாகரன், சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள். காதல் காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் தனக்கு 5 வருட வெற்றி இடைவெளியை நிரப்பும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஆர்யா.

Sharing is caring!