கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அஜித்தின் வழக்கம்.

தமிழ்நாட்டில் புயல் அடித்தாலும், மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும், துப்பாக்கி சூட்டில் யாராவது இறந்தாலும், தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அவற்றைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அஜித்தின் வழக்கம்.

அரசியலில் இறங்காத நடிகர்கள் கூட மக்கள் பிரச்சினைகளுக்காகவும், மக்கள் மடிந்ததற்காகவும் ஆறுதலாக ஏதாவது ஒரு அறிக்கை விடுவார்கள். ஆனால், அப்படிப்பட்ட எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்களின் துயரங்களுக்கு ஆறுதல் சொல்லாத ஒரே நடிகர் அஜித் மட்டுமே. பலரும் அதைப் பற்றிப் பலமுறை பேசினாலும், எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார் அஜித்.

ஆனால், அவருடைய ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்ததாக செய்தி வெளியானதுமே, உடனே ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசியல் என்றதுமே அவர் ஆடிப் போனதன் காரணம் என்ன என்பது அவருக்கே வெளிச்சம்.

ஒரு மேடை நிகழ்வில் கருணாநிதியை எதிர்த்து கேள்வி கேட்டவர், அன்றிலிருந்து அதிமுக அனுதாபி என்ற பார்வையுடனேயே அஜித் பார்க்கப்பட்டு வருகிறார். அவருடைய நேற்றைய அறிக்கையில் தான் அதிமுக அனுதாபி அல்ல என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு அவருடைய பதில்களையும் அவருடைய அறிக்கையில் உள்ளடக்கி வைத்திருக்கிறார்.

அவருடைய அறிக்கையில் உள்ள, “என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே” என்ற வரிகள் சினிமாவைத் தவிர தனக்கு வேறு எதிலும் ஈடுபாடு இல்லை. தன்னுடைய ரசிகர்களும் தன்னை ஒரு நடிகனாக மட்டுமே பார்க்கட்டும், வேறு எந்த கோணத்திலும் பார்க்க வேண்டாம். அவர்கள் தன் படங்களைப் பார்த்து ரசிக்கட்டும் என நடிகர் – பார்வையாளர் என்ற உறவுக்குள் மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறார்.

“நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்துகிறேன்,” என்ற வரிகள் ‘விஸ்வாசம், பேட்ட’ சண்டையில் ரஜனிக்கான பதிலாக பார்க்கப்படுகிறது.

“சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்றுப் பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை,” என்ற வரிகள் அவருடைய ரசிகர்களின் சமூக வலைத்தள மோதலுக்கான பதில். இதற்குப் பிறகு சமூக வலைத்தள சண்டையை அஜித் நிறுத்துவார்களா என்பது பலமாக எழும் கேள்வி.

“அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை,” என்ற வரிகள், நான் அரசியலை உற்று நோக்குகிறேன், ஆனால், யாரும் என்னைக் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறார்.

அறிக்கையின் கடைசியில் ‘வாழு, வாழ விடு’, என அவர் முடித்திருப்பது, என்னை என் வழியில் வாழ விடுங்கள் என்ற அவரது எண்ணத்தை உணர்த்துகிறது.

அஜித்தின் அறிக்கையில் ‘விஸ்வாசம்’ பட வெளியீட்டின் போது, கட்அவுட் சரிந்து அவரது ரசிகர் ஒருவர் மரணம் அடைந்தது பற்றிய வருத்தமோ, படம் பார்க்க பணம் தராத அப்பாவைத் தீயிட்ட ரசிகர் பற்றிய எந்த ஒரு கண்டனமோ இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!