கமல் நன்றி

கஜா புயலால் பாதித்தோருக்கு உதவ வேண்டும் என நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு, கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வெளியிட்ட வீடியோ பதிவில், தமிழகம், புதுவையில், பல மாவட்டங்களில் பெரும் அழிவை, கஜா புயல் உருவாக்கியுள்ளது. 3.7 லட்சம் பேர், வீடற்றவர்களாகி விட்டனர். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள், மக்கள் நல இயக்கங்கள், மக்களுக்கு உதவுவதில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

ஒரே தேசம், ஒரே மக்கள் என்பதே, இந்தியாவின் ஒற்றுமை. கஜா பாதிப்பை பலரும் அறியவில்லை. சகோதரத்துவத்தை உணர்த்துவதற்கு, இதுவே சிறந்த தருணம். கமலின் மக்கள் நீதி மையம், களத்தில் நின்று வேலை செய்கிறது. கஜா பாதிப்பிலிருந்து, மக்கள் மீள உதவிபுரியுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்து, மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர், கமல், டுவிட்டரில் கூறியுள்ளதாவது:கஜா பாதிப்புகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்; அனைவரும் அறிய, குரல் கொடுத்துள்ளீர்கள். வேற்றுமையை கடந்து, அனைவரும் இணைவதற்கு, உங்களை போன்றோர், ஒரு நுாலாக செயல்படுகிறீர்கள்.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Sharing is caring!