காமெடி நடிகர் விடுதலை

மலையாள சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் அஜூ வர்கீஸ். கடந்த வருடம் கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியாக கைது செய்ய்யப்பட்ட நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் ஒரு பதிவை இட்ட அஜூ வர்கீஸ், அதில் தேவையில்லாமல் அந்த நடிகையின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அது அப்போதே சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. உடனே மன்னிப்பு கேட்டு அதை நீக்கியும் விட்டார் அஜூ வர்கீஸ்.

ஆனால் இது தொடர்பாக கிரீஷ் பாபு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அஜூ வர்கீஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை பரிசீலித்த நீதிபதி, அஜூ வர்கீஸின் செயலில் எந்தவிதமான தவறான உள்நோக்கமும் இல்லை என கூறி அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளார்.

தன் மீது வழக்கு தொடுக்கப்பட்ட சமயத்தில், “காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லியிருப்பாரே தவிர அவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை.. அவரும் என் நண்பர் தான்” என சம்பந்தப்பட்ட நடிகையிடம் இருந்து அவரது கையெழுத்துடன் அபிடவிட் ஒன்றையும் வாங்கிவந்து நீதிமன்றத்தில் அஜூ வர்கீஸ் சமர்ப்பித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!