குழப்பத்தின் பின் வெளியானது “இமைக்கா நொடிகள்”

நயன்தாரா, அதர்வா, அனுரக் கஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் திரைப்படம், பெரும் குழப்பத்திற்கு பிறகு, நேற்று இரவு வெளியானது. தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட பிரச்னையால், காலை, மதியம், பின் மாலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் ஷோவாக திரையிடப்பட்ட இரவு காட்சியில் அமர்ந்தோம்.

சைக்கோ கில்லர் களத்தை கொண்ட மற்றொரு படம். இந்தமுறை, இமாலய திறன் கொண்ட ஒரு சூப்பர் வில்லனை கண்டுபிடிக்க போராடும் பெண் சிபிஐ அதிகாரியை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. சைக்கோ கொலைகாரனாக பாலிவுட் இயக்குனர் அனுரக் கஷ்யப். சிபிஐ அதிகாரியாக நயன்தாரா, அவரது தம்பியாக அதர்வா, அதர்வாவின் காதலியாக ராஷி. படத்தை டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து ரொம்பவே ஸ்டைலாக இயக்கியுள்ளார், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.  கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதியும் தோன்றுகிறார்.

பெங்களூரில் தொடர் கொலைகள் செய்துவரும் ருத்ரா என்ற சைக்கோ கொலைகாரனை கொன்று பிடித்த ஹீரோ அதிகாரி நயன்தாரா. ஆனால், சில வருடங்களுக்கு பிறகு, ருத்ரா என்ற பெயரில் மீண்டும் சில கொலைகள் அதே பாணியில் நடக்கின்றன. தான் இன்னும் சாகவில்லை என சிபிஐக்கு ஓபன் சேலஞ் விடுக்கும் கொலைகாரன், இந்தமுறை நயன்தாராவை குறிவைத்து ஊடகங்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாக்குகிறார். இதற்கு இடையே, சென்னையில் நடக்கும் அதர்வா – ராஷி காதல். இரண்டு கதைகளுக்கும் இடையே ஏற்படும் தொடர்பு என்ன… ஈவு இரக்கமில்லாத அதிபுத்திசாலி வில்லனை நயனும், அதர்வாவும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை பல சுவாரஸ்யமான ட்விஸ்ட்களோடு படமாக்கியுள்ளார் இயக்குனர் அஜய்.

முதலில் ப்ளஸ் பாயிண்ட்ஸ். ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும் படத்தின் மிக பெரிய பலம் திரைக்கதை தான். சந்தேகமே இல்லாமல் டாப் பெர்பார்மன்ஸை தட்டிச் செல்கிறார் வில்லன் கஷ்யப். இயக்குனராக படத்திற்கு என்ன வேண்டும் என்பதை சரியாக புரிந்து, திரைக்கு கொண்டு வந்துள்ளார். நயன்தாரா, அதர்வாவின் ஆக்டிங் மிக சிறப்பு. ஹிப் ஹாப் ஆதியின் இசை பெரும்பாலான இடங்களில் மிரட்டுகிறது.

இப்போ மைனஸ் பாயிண்ட்ஸ்: ஒரு பேக்அப் பிளான் கூட இல்லாமல், கொலைகாரன் சொல்வதையெல்லாம் அப்படியே செய்யும் நயன்தாராவை நம்மால் புத்திசாலி அதிகாரியாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதர்வாவின் காதல் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். அந்த ரொமான்ஸ் போர்ஷனே இம்மி அளவு கூட லாஜிக்கே இல்லாமல் இருப்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், சைக்கோ கொலைகாரனை துரத்தும் விறுவிறுப்பான கதையை அங்கங்கே பிரேக் போட்டு, அதர்வாவின் காதல் பிளாஷ்பேக் என டிராக் மாறுவது தலைவலி. அதேபோல விஜய் சேதுபதி – நயன்தாரா இடையே வரும் ‘கியூட்டான’ ஓகே பேபி ரொமான்ஸ் போர்ஷனும் படத்தோடு ஒட்டவில்லை. கதைக்கு பின்னணி கொடுக்கும் காட்சிகளாக இருந்தாலும், பிளாஷ்பேக்கை கொஞ்சம் கத்தரித்திருக்காலம்.

இடையிடையே சில இடங்களில் டல்லடித்தாலும், ரசிக்கக்கூடிய வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் அதை தாங்கிக் கொள்ள முடிகிறது. நிச்சயம் எல்லோரும் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தையும் படைத்துள்ளது ‘இமைக்கா நொடிகள்’.

Sharing is caring!