சத்யராஜ் மகள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு, சத்யராஜ் மகள் திவ்யா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வில்லனாக நுழைந்து, ஹீரோவாக மாறி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கும் சத்யராஜ்க்கு, திவ்யா என்கிற மகளும், சிபிராஜ் என்கிற மகனும் உள்ளனர். இதில், மகன் சிபிராஜ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். மகள் திவ்யா, ஊட்டச்சத்து மருத்துவராக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையே சத்யராஜ் மகள் திவ்யா, ஒரு ஆவணப்படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து திவ்யா, சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சத்யராஜ் மகள் திவ்யா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஊட்டச்சத்து மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். மேலும், ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

இதை வைத்து நான் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல்கள் வருகிறது.அந்த தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை. சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!