சர்கார் சர்ச்சை

தமிழ் சினிமாவையும் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்களில் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புவது வழக்கமாக இருக்கும் ஒன்றுதான். விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் ஆகியவை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனாலேயே, அந்தப் படம் நன்றாக ஓடியது என கூறியவர்கள்தான் அதிகம்.

விஜய் நடித்து இந்த வருட தீபாவளிக்கு வெளிவந்துள்ள சர்கார் படத்திலும் பல சர்ச்சைகள் ஆரம்பமாகியுள்ளன. படம் வெளியாவதற்கு முன்பு சர்கார் படத்தில் அரசியல் இருக்கிறது என படத்தின் நாயகன் விஜய்யே தெரிவித்திருந்தார். ஆனால், அது எந்த மாதிரியான அரசியல் என்பது தெரியாமல் இருந்தது.

படம் திரைக்கு வந்த பின் அந்த அரசியல் என்னென்ன என்பது தெரியவந்தது. நிகழ்கால அரசியலைக் கிண்டலடித்து படத்தில் பல காட்சிகள் இருக்கின்றன. டெங்கு பற்றிய வசனம், பாடல் காட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றைத் தூக்கிப் போடுவது, படத்தின் வில்லி வரலட்சுமியின் கதாபாத்திரப் பெயர் கோமளவல்லி, அவர் வரும் போது வழியில் இருப்பவர்கள் குனிந்து வணங்குவது, என பல காட்சிகள் படத்தில் உள்ளன.

இவற்றிற்கு தமிழக அமைச்சர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த சர்ச்சை விவகாரங்களால் படத்திற்கான வரவேற்பு இன்னும் கூடுதலாகி வருவதாக திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.

Sharing is caring!