சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் சுதாசந்திரன்

டான்ஸ் மற்றும் ஆக்டிங் இந்த இரண்டையும் எந்த காலத்துலயும் நான் விட்டுக்கொடுக்க தயாரில்லை. அதனால தொடர்ந்து இளமை காலத்திலிருந்தே அதே உத்வேகத்தோடு நடிச்சிட்டு இருக்கேன் என உற்சாகத்தோடு பேசுகிறார் நடிகை சுதாசந்திரன் அவர்கள்.

இப்போது இருக்கிற மாதிரி எல்லாம் என் இளமை காலத்துல திறமையை வெளிபடுத்த நிறைய சேனல்கள் மற்றும் மீடியா வெளிச்சம் இருக்கும் மேடைகள் கிடையாது. அதனால் ரொம்பவே கஷ்டபட்டுதான் எங்க திறமைகளை வெளிப்படுத்தினோம்.

அதெல்லாம் பெரிய போராட்டம்தான். அதையும் மீறி மக்களின் அன்போடும், அங்கீகாரத்தோடும் முப்பது வருஷமா பயணிக்கிறேன். வெற்றிகள் கிடைக்கிறது கஷ்டம். அதை தக்க வெச்சுக்கறது அதைவிட கஷ்டம். அதனால் நாங்க எதிர்கொண்டு வந்த கஷ்டங்களை எல்லாம் போட்டியாளர்களுக்கு சொல்லுவோம்.

என் மூணு வயசுல எனக்குள் இருந்த டான்ஸ் திறமையை எனது பெற்றோர் கண்டுபிடிச்சு, டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பினாங்க. இதுதான் என் எதிர்காலம்னு நானும் டான்ஸை காதலிக்க ஆரம்பிச்சு, ஆர்வத்தோடு கத்துக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து அரங்கேற்றம் முடிச்சுட்டு, மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடினேன். அப்படியே நடிகை மற்றும் நடுவரானாலும் டான்ஸை மட்டும் எந்த சூழலிலும் கைவிடவில்லை.

இளம் வயதில் ஏற்பட்ட கார் விபத்துல என் ஒரி காலை இழந்தேன். அப்போது உடல் மற்றும் மன வலியால் துடிச்சு போனேன். ஆனா பெற்றோர் மற்றும் நான் நேசித்த நடனம் கொடுத்த உத்வேகத்துல பிரச்சனையை எதிர்த்து மன தைரியத்துடன் போராடினேன்.

செய் அல்லது செத்துமடி என்பதுதான் பொதுவான பாலிசி. அது எனக்கு மட்டும் விதிவிலக்காகுமா. நெவர். அதனால நடந்ததை நினைச்சு வருந்துறதைவிட, எதிர்காலம் சிறப்பாக அமைய தேவையான முயற்சிகளை செய்ய நினைச்சேன். டான்ஸ் என் தேர்வா இருந்துச்சு.

தன்னம்பிக்கையோடு நான் பயணிச்சதை பார்த்து நிறைய டான்ஸ் மற்றும் சினிமா வாய்ப்பு வந்துச்சு. அப்படி நான் நடிச்ச முதல் படம் 1984-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மயூரி திரைப்படம். அந்த படத்தில் என் நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சதோடு, தேசிய விருதும் கிடைச்சது. அந்த விருதுதான் தொடர்ந்து நடிப்பில் என் திறமைகளை வெளிப்படுத்தும் உத்வேகத்தை கொடுத்துச்சு.

அப்படியே தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடிச்சேன். கல்யாணத்துக்கு பிறகு சின்னத்திரையில் அதிகமாக கவனம் செலுத்தினேன். பல மொழி சீரியல்களில் நடுவராகவும் 25-வருஷமா பயணிச்சிட்டு இருக்கேன்.

அப்படிதான் தமிழ்ல நான் நடிச்சு பல வருஷமான நிலையில், குட்டி பத்மினி என்னை தமிழ் சீரியலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. கலசம், தென்றல், தெய்வம் தந்த வீடு சீரியல்களில் நடிச்சதோடு, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் நடத்தினேன்.

அப்புறம் நடுவர் பணினு தொடர்ந்து தமிழ் மக்களோடு தொடர்பில் இருக்கேன். மாசத்துல குறைந்த பட்சம் ரெண்டு பெரிய கச்சேரியில் ஆடுவததை நான் வழக்கமா வெச்சிருக்கேன். எங்கே போனாலும் மக்கள் ரொம்பவே அன்பா பழகுறாங்க என புன்னகைக்கிறார் சுதாசந்திரன்.

Sharing is caring!