சென்னையில் காய்கறி விற்றார் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா திருமணத்திற்குப் பிறகும் மிக சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, பவன் குமாரின் ‘யு டர்ன்’, தியாகராஜ குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’, நாகசைத்தன்யாவுடன் தெலுங்கு படம் என அடுத்தடுத்து நிறையப்படங்களில் நடித்து வருகிறார். பொது சேவையில் ஆர்வம் கொண்ட சமந்தா சினிமாவில் நுழைந்ததிலிருந்து பல சமூக பணிகளையும் செய்து வருகிறார்.

2012-ஆம் ஆண்டு இவர் துவங்கிய பிரத்யுஷா (PRATYUSHA) என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், பல ஏழைக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தனது மருத்துவ நண்பர்களுடன் சேர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள ஜாம் பஜார் மார்க்கெட்டுக்கு சென்று அங்குள்ள ஒரு காய்கறி கடையில் அமர்ந்து காய்கறி விற்றிருக்கிறார்.

இதையறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டுக்குப் படையெடுக்க, சிறிது நேரத்தில் அக்கடையில் இருந்த அனைத்து காய்கறிகளும் விற்றுத் தீர்ந்திருக்கிறது. பிறகு அந்த கடையில் வசூலான பணத்தை நலிந்த மக்களுக்கு வழங்கியுள்ளார் சமந்தா.

Sharing is caring!