ஜெயலலிதா வாழ்க்கை படமாகிறது

முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை, தமிழ்,தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படமாக இருக்கிறது.

தமிழக அரசியலின் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவரான ஜெயலலிதா, முதல்வராக இருந்ததற்காக மட்டுமல்லாமல், ஆணாதிக்க அரசியல் களத்தில் கம்பீரமான ஒரு பெண்ணாக நின்று உலகெங்கும் உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்ததற்காக போற்றப்படுபவர். அவரது வாழ்க்கை கதையை ‘விப்ரி மீடியா’ நிறுவனம் தயாரிக்கிறது. 1983ம் ஆண்டு இந்தியா வென்ற உலகக் கோப்பை மற்றும் என்.டி.ஆரின் வாழ்க்கை படம் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

“டாக்டர் ஜெ ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்தி பெற்ற பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர்.உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்.திரை துறையிலும்,அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறோம். அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த படத்தை துவக்க  இருக்கிறோம். அன்றே ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிட இருக்கிறோம்.” என்கிறார் விப்ரி மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத்.

தமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குகிறார். தென்னிந்தியாவின் பிரதான நட்சத்திரங்களுடன், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் விப்ரி மீடியா நிறுவனம், ’83 உலக கோப்பை’ என்கிற ஹிந்தி படத்தையும், ‘என் டி ஆர் சுய சரிதை’ திரைப்படத்தை பாலகிருஷ்ணா நடிக்க, கிரிஷ் இயக்கத்தில தயாரிக்கிறது  என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!