தனி ஒருவன் 2 விரைவில்

3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

கடந்த 2015ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் மோகன்ராஜா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இன்று தனி ஒருவன் படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வருடங்கள் செல்ல செல்ல இந்த படத்தின் மீதான மதிப்பை உங்கள் அன்பால் பெரிதாக்கிக் கொண்டே செல்கின்றீர்கள். அந்த படம் எனக்கு ஒரு ஆசீர்வாதம் போல. இந்த தருணத்தில் அப்படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஒரு நல்ல விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன்.

நானும் ஜெயம் ரவியும் இணைந்து தனி ஒருவன் 2 உருவாக்குகிறோம். நிச்சயமாக இந்த படத்திற்கு அதைவிட அதிகமாக உழைப்போம். அதற்கும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் ஜெயம் ரவியும் பேசியுள்ளார்.

தற்போது #3YearsOfThaniOruvan மற்றும் #ThaniOruvan2 இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Sharing is caring!