தன்னிடம் தவறாக பேசி டார்ச்சர் செய்தார் என்று பெண் இசையமைப்பாளரான சிந்துஜா ராஜாராம்

வைரமுத்து தன்னிடம் தவறாக பேசி டார்ச்சர் செய்தார் என்று பெண் இசையமைப்பாளரான சிந்துஜா ராஜாராம் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று திரைப்பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்தது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து பலரும் வைரமுத்துவால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்களை தெரிவித்து வருவதாகக்கூறி, பலரது குற்றச்சாட்டுக்களை பதிந்து வருகிறார் சின்மயி.

ஆனால் அவர்கள் யாரும் தங்களின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில் சிந்துஜா ராஜாராம் (வயது 32) என்ற பெண்மணி, வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியை சின்மயி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் சிந்துஜா தெரிவித்துள்ளதாவது:

“நான் 2002-ம் வருடம் என் 16-வது வயதில் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தேன். எனக்கு 18 வயது இருக்கும் போது கோஸ்மிக் ஸ்டுடியோவில் பணியாற்றிவந்தேன். அப்போது என் தந்தைக்கு பெங்களூருவுக்கு பணி மாறுதல் ஏற்பட்டது. ஆகவே சென்னையில் நான் தங்க நல்ல விடுதியை என் அம்மா தேடினார். கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்து விடுதி குறித்து கேள்விப்பட்டு அதற்கு போன் செய்தோம். அப்போது வைரமுத்து என் அம்மாவிடம் பேசினார், நானும் திரைத்துறையில் இருப்பதாக என் அம்மா வைரமுத்துவிடம் கூறினார். பிறகு வைரமுத்துவை நேரில் சந்தித்தோம். அப்போது நான் இசையமைத்த பாடல் சிடியை அவரிடம் கொடுத்தேன். அவர், இதை ஏ.ஆர் ரகுமானிடம் அளிக்கிறேன் என்றார். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த விடுதியில் இருந்து வெளியேறி என் குடும்ப நண்பர் வீட்டில் தங்கினேன். அப்போது என் போன் நம்பரை வைரமுத்து வாங்கி கொண்டார்.

ஒரு வாரம் கழித்து எனக்கு போன் செய்த வைரமுத்து என்னை பார்க்க வேண்டும் என்றார். நானும் சரி என பேசி போனை வைத்துவிட்டேன்.
ஆனால் மீண்டும் மீண்டும் போன் செய்து என்னிடம் தவறாக பேசினார். “நான் உன்னை மிஸ் செய்கிறேன், உன்னை நினைத்து நினைத்து கவிதை எழுதுகிறேன். உன் மீது காதல் கொண்டுவிட்டேன்” என்றெல்லாம் பேசினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நான், நீங்கள் என் அப்பா மாதிரி, இப்படியெல்லாம் பேசாதீர்கள். உங்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது என கூறினேன்.

ஆனால் அதன் பிறகும் எனக்கு அவர் போன் செய்துகொண்டே இருந்தார். நான் போனை எடுக்கவில்லை.
அப்போது தான் சன் டிவியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் அவர் இப்படி தொல்லை கொடுப்பது எனக்கு தெரியவந்தது.
வைரமுத்துவால் எனக்கு நேரடியான பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் இது குறித்து புகார் அளிக்கவில்லை. ஆனால் என் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் இது குறித்து வருத்தத்துடன் தெரிவித்தேன்.

சின்மயியிடமும் இது குறித்து இமெயிலில் தெரிவித்தேன். கூறினேன். பின்னர் தான் சின்மயி தவிர யாரும் தங்கள் பெயரை வெளிப்படுத்தவில்லை என்பதை உணர்ந்தேன். ஆகவேதான் நானே தற்போது வெளிப்படையாக வைரமுத்து குறித்து பேசியுள்ளேன்” என்று சிந்துஜா ராஜாராம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!