தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று. அவரது திரைப் பயணம் பற்றிய சின்ன பிளாஷ் பேக்…

வெண்ணிற ஆடை தான் ஜெயலலிதாவின் முதல் படம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எபிச்ட்லே என்ற ஆங்கிலப் படம் தான் ஜெயலலிதா நடிப்பில் வெளியான முதல் படம்.

1965ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை தான் தமிழில் ஜெயலிதாவின் முதல் படம். தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஜெயலலிதாவை கமர்ஷியல் ஹீரோயின் ஆக்கியது. ஆயிரத்தில் ஒருவன் தான், எம்.ஜி.ஆர் – ஜெயலிதா நடிப்பில் வெளியான முதல் படம் .

தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று புகழ்பெற்ற இந்த ஜோடி, ஆயிரத்தில் ஒருவன், தேர் திருவிழா, காவல்காரன், குடியிருந்த கோயில், நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, சந்திரோதயம், அடிமைப்பெண், ராமன் தேடிய சீதை, காதல் வாகனம், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், குமரி கோட்டம், கன்னி தாய், என் அண்ணன், எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், ஒளி விளக்கு, கணவன், நீரும் நெருப்பும், பட்டிக்காட்டு பொன்னையா, கண்ணன் என் காதலன், அன்னமிட்ட கை, புதிய பூமி மற்றும் அரச கட்டளை என்று மொத்தம் 26 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

ஜெயலலிதா சிறந்த நடிகை மட்டுமின்றி சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர். அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற அம்மா என்றால் அன்பு உள்பட 10க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். ஜெயலலிதா சிறந்த பாடகியாக வரவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் ஆசையாக இருந்தது. நல்ல குரல் வளம் இருந்தும் ஏனோ ஜெயலலிதா பாடகியாக ஆர்வம் காட்டவில்லை.

ரஜினி நடித்த பில்லா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டார் ஜெயலலிதா. அதன் பிறகுதான் அந்த கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்தார்.

ரஜினி நடித்த ரங்கா படத்தில் அவரின் அக்கா கேரக்டரில் நடிக்க ஜெயலலிதா சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரை அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்திருந்த எம்.ஜி.ஆர் படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி ஜெயலலிதாவுக்கு பதிலாக கே.ஆர்.விஜயாவை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 140 க்கும் அதிகமான படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார்.

Sharing is caring!