தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு – தயாரிப்பாளர்கள் சங்கத்தை காப்பாற்றும்படி கோரிக்கை

தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் விஷால் மீது முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினர் நேற்று முன்தினம் திடீரென, சென்னை, திநகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதோடு, அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

இதை உடைக்க விஷால் நேற்று வந்தபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசார் விஷாலை கைது செய்தனர். இதற்கிடையே அதிருப்தி தயாரிப்பாளர்கள், முதல்வரை சந்தித்து மனு அளித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்தனர்.

கைது செய்யப்பட்ட விஷால் மாலையில் விடுவிக்கப்பட்டார். தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, எல்லாவற்றுக்கும் கணக்கிற்கு உள்ளது. முறையாக வந்து கேட்டால் அதை காண்பிக்க தயாராக உள்ளோம். திட்டமிட்டப்படி, இளையராஜாவின் நிகழ்ச்சி நடக்கும் என்றார்.

இதனிடையே தயாரிப்பாளர்கள் இருபிரிவாகி பிரச்னை செய்வதால், கிண்டி வட்டாச்சியர் ராம்குமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் விஷால், ஜே.கே.ரித்தீஷ் இருவர் மீதும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்கத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்தும், சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் விஷால் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இம்மனு மீதான விசாரணை மதியம் நடந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்காமல் அதற்காக சங்கத்தை பூட்டுவீர்களா?, என அதிருப்தி தயாரிப்பாளர் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். உடனடியாக, தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வருவாய் கோட்டாட்சியர், பதிவாளருக்கு உத்தரவிட்டார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீஸ் தடுத்து நிறுத்தியது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, சங்க நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Sharing is caring!