தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது.

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினார்கள்.

நிர்வாகம் சரியாக செயற்படவில்லை என்று சங்க வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு சங்க அலுவலகத்தைப் பூட்டினார்கள். விஷால் நேற்று (20) காலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முற்பட்டார்.

அப்போது அவருக்கும் பொலிசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் தரப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சங்கத்திற்கு போடப்பட்ட சீலை அகற்றுமாறு வருவாய் கோட்டாட்சியர், பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Sharing is caring!