தரக் குறைவாகப் பேசி டிவீட் ஒன்று போட்டதுதான் அதற்குக் காரணம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், டுவிட்டரில் சில தினங்களுக்கு முன்பு கோபத்துடன் ஒரு பதிவைப் போட்டிருந்தார். ஒரு ரசிகர், ரகுலை தரக் குறைவாகப் பேசி டிவீட் ஒன்று போட்டதுதான் அதற்குக் காரணம். அந்த நபருக்கு பதிலடி கொடுக்கும் போது அவருடைய அம்மாவைப் பற்றியும் ரகுல் குறிப்பிட்டிருந்தார். அந்த நபர் அப்படி செய்ததற்கு அவருடைய அம்மா என்ன செய்தார், அவரது அம்மா பற்றி நீங்கள் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என பலரும் ரகுலுக்கு அறிவுரை செய்திருந்தார்கள்.

அவர்களுக்கு நேற்று ரகுல் பதிலளித்திருந்தார். அதில், “என்னுடைய நெறிமுறைகளைப் பற்றிக் கேள்வி கேட்பவர்கள், பெண்கள் காட்சிப் பொருளாக்கப்படும் போது ஏன் பேசாமல் இருக்கிறீர்கள். அப்படி குறுகிய மனம் கொண்டவர்களுக்காக எனது வார்த்தைகளைத் தேர்வு செய்துதான் பதிவிட்டேன். இதுவே அவர்களது குடும்பத்தினருக்கு நடந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று அவர்களுக்குப் புரியட்டும். அவரது அம்மாவும் அவரை அறைந்திருப்பார் என நம்புகிறேன்,” எனக் கூறியிருந்தார்.

அதற்கும் பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இன்று அந்த நபர் எப்படிப்பட்ட தரக் குறைவான வார்த்தைகளை தன் மீது பிரயோகித்தார் என்று அந்த நபரின் டுவீட்டுடன் ரகுல் பதிவிட்டிருக்கிறார். “பெரும் வெறுப்பு காட்டுபவர்களுக்காக..இந்த டுவீட்டுக்குத்தான் நான் பதிலளித்தேன். அந்த நபர் உடனே அந்த டிவீட்டை நீக்கிவிட்டார். இப்போது சொல்லுங்கள், இதற்கு நீங்கள் அமைதியாக பதிலடி கொடுப்பீர்களா,” என கேள்வி கேட்டிருக்கிறார்.

Sharing is caring!