‘தல 59’ படத்தில் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் ‘தல 59’ படத்தில் தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தல 59’ என்று குறிப்பிடப்படுகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. பிரபல இயக்குனர் பிரியதர்‌ஷன் மற்றும் முன்னாள் நடிகை லிசி இருவரது மகள்தான் கல்யாணி.

‘ஹலோ’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கல்யாணி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘வான்’ என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Sharing is caring!