தியேட்டர் உரிமையாளர்கள் சங்க அவசரக்கூட்டம் இன்று நடக்கிறது

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கடந்த மார்ச் 1ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது. தியேட்டர்களில் படத்தை திரையிடும் கியூப் கட்டண உயர்வை கண்டித்து இந்த நிலைப்பாட்டை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் ஆதரவு தரவில்லை. இதனால் போராட்டத்தை தயாரிப்பாளர் சங்கம் நீட்டித்திருப்பதோடு இனி படத்தை திரையிடும் பொறுப்பு தியேட்டரைச் சார்ந்தது. அப்படிப்பட்ட தியேட்டர்களில் மட்டும் படத்தை திரையிடுவோம் என்று அறிவித்தது.

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவால் தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் மக்கள் திரையரங்கிற்கு வரவில்லை. பல தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. சில தியேட்டர்களில் கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள், சில தியேட்டர்களில் பழைய திரைப்படங்களை திரையிடுகிறார்கள்.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநில தயாரிப்பாளர் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மட்டுமே செய்தனர். ஆனால் தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதனால் தியேட்டர்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் நடக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் போராட்டம், கியூப் பிரச்சினை, தியேட்டர்களின் எதிர்காலம் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

Sharing is caring!