திருமணத்திற்கு பின் நடித்தால் என்ன தவறு?

தொடர்ந்து, மூன்று வெற்றிப் படங்களை தந்த நடிகை சமந்தா. அடுத்து, சீமராஜா, யு டர்ன் என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் கணிசமான படங்களை கைவசம் வைத்துள்ளார்; அவருடன் பேசியதிலிருந்து:

அடுத்து வெளியாக உள்ள படங்கள் என்ன?
யு டர்ன், சீமராஜா உள்ளிட்ட நான்கு படங்கள் இந்தாண்டு வெளியாகின்றன. நான்கு படங்களும் வெற்றி பெற வேண்டும் என, விரும்புகிறேன். யு டர்ன் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இது, ஏற்கனவே கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு, வெற்றி பெற்ற படம்.

யு டர்ன் எந்த மாதிரி படம்?
இது, த்ரில்லர் படம். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை, த்ரில்லிங் தான். கடைசி வரை ரசிகர்களை, நாற்காலியின் நுனியிலேயே வைத்திருக்கும் வகையிலான காட்சிகள் நிறைந்தது. இதில், பத்திரிகையாளராக நடித்துள்ளேன்.

படத்தில் நடித்த ஆதி குறித்து?
ஆதி, இந்த படத்தில் போலீசாக ளார்; அவர் துாங்கி எழுந்தாலும், போலீசாக நடிக்க போகலாம். அந்தளவு கச்சிதமாக, இந்த வேடத்துக்கு பொருந்தியுள்ளார். அவரது பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தும் பக்காவாக அமைந்துள்ளன.

படத்தில் பாடல் இல்லையா?
ஆம்; யு டர்ன் படத்தில் பாட்டு இல்லை. விளம்பர பாடல் மட்டுமே உள்ளது.

இந்தாண்டு உங்களுக்கு எப்படி உள்ளது?
ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை ஆகிய படங்கள் வெற்றியாக அமைந்தன. இந்தாண்டு, இதுவரை இனிமையாகவே அமைந்துள்ளது.

சீமராஜா படம் எப்படி?
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். பொதுவாக, நான் நடித்த படங்கள் வெளியாகும் போது பயப்படுவேன். இந்த படம் வெற்றி பெறுமா இல்லையா… என, சந்தேகம் வரும். ஆனால், சீமராஜா படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. எனக்கு தீனி போடும் வகையில், நல்ல ரோல் அமைந்துள்ளது.

உங்கள் வெற்றிக்கு காரணம்?
கடவுள் ஆசிர்வாதம், கடின உழைப்பு இரண்டுமே காரணம்.

திருமணத்திற்கு பின் நடிப்பது குறித்து?
ஹீரோக்கள், திருமணமாகி, பல ஆண்டுகளுக்கு பின்னும் தொடர்ந்து நடிப்பது இல்லையா? அதுபோல தான், நடிகையரும், திருமணத்துக்கு பின்னும் சினிமாவில் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து வருகிறேன்.

நடிகையருக்காக கதை அமைப்பது குறித்து?
ஜோதிகா, நயன்தாரா, தமன்னா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடிகையருக்கான கதையில் நடிக்கின்றனர். அனைவரும் வெற்றி பெற வேண்டும் என, விரும்புகிறேன். அவர்கள் வெற்றி பெற்றால் அது, அனைத்து நடிகையருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படும்.

Sharing is caring!