திருமணம் செய்து கொள்ளும் ஆசை தற்போது தனக்கு இல்லை

‘திருமணம் செய்து கொள்ளும் ஆசை தற்போது தனக்கு இல்லை’ என அதிர்ச்சி குண்டை வீசியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘சர்க்கார்’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி:

நான் படிக்கும் காலத்தில், ஒரு நாளும் சினிமா நடிகை ஆவேன் என்று நினைத்தது கிடையாது. படிப்பை முடித்த பின், மாடலிங் செய்து வந்தேன். மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ரொம்பவும் யோசித்துத்தான், சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். என்னுடைய நல்ல நேரம், மலையாளப் படத்தில் நடித்தது எனக்கு பெருமையைத் தேடித் தந்தது. நடிகை என்ற புகழ் வெளிச்சத்திற்கு வந்ததும், எனக்கு தமிழ் சினிமாவில் நடிக்க அழைத்தனர். அப்போதும் மிகுந்த தயக்கத்துடன் தான் நடிக்க வந்தேன். இங்கும் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனக்கு தமிழ் பட உலகம் ஆதரவும், அடையாளமும், அங்கீகாரமும் அளித்தது. அதனால், நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.

தமிழ் சினிமா பட உலகைப் பொறுத்த வரை, இளம் இயக்குநர்கள் நிறைய பேர், அடுத்தடுத்து படம் இயக்க வருகின்றனர். எல்லோருமே வித்தியாசமான சிந்தனைகளோடும்; திறனோடும் களம் இறங்குகின்றனர். தமிழ் ரசிகர்களும் தரமான படங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற தெளிவான மன நிலையில் உள்ளனர். அதனால், நாமும் சினிமாவில் நிலைக்க நிறைய உழைக்க வேண்டும். நன்கு உழைப்பதால்தான், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். சினிமாவில் பிசியாக இருக்கும் இந்த நேரத்தில், நான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை. இன்னும் நிறைய படங்களில் நடிக்க விருப்பப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sharing is caring!