திரை அனுபவங்களை பகிர்கிறார் கீர்த்தி

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்கள் படங்களில் அதிகம் நடித்து வருபவர், கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி, தன் திரை அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

சண்டக்கோழி 2 படத்தில் நடித்தது பற்றி…

சண்டக்கோழி முதல் பாகம் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகம், தற்போது வெளியாகிறது. இதில் நடித்தது இனிமையான தருணம். முதல் பாகத்தில், மீரா ஜாஸ்மின் பாத்திரம் அனைவரையும் கவர்ந்து இருந்தது. அந்த மாதிரி நம்மால் நடிக்க முடியுமா… என சந்தேகம் இருந்தது. ஆனால், இயக்குனர் கதை சொல்லி, நடித்து காட்டிய விதத்தை பார்த்த போது, நம்பிக்கை வந்துவிட்டது. நடிக்க மறுத்து இருந்தால், நிச்சயம் நல்ல படத்தை தவறவிட்டிருப்பேன்.

விஷாலைப் பற்றி?

நடிகர் சங்க பொதுச் செயலர், தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர், தயாரிப்பாளர் என, பல முகமாக விஷாலை பார்த்தேன். எப்போதும், நான்கைந்து பேருடன் தான் வருவார். ரொம்ப எளிமையாக பழகுவார்.

படத்தில் ஆக் ஷனில் அசத்தியுள்ளீர்களாமே?

எனக்கு கார் மட்டுமே ஓட்டவரும். ஆனால், படத்தில் ஸ்கூட்டரில், ‘வீலிங்’ செய்வது போல் எல்லாம் காட்சி இருந்தது. அந்த காட்சியை எப்படி எடுத்தோம் என்றெல்லாம், இப்போது சொல்ல முடியாது.

இயக்குனராகும் எண்ணம் உண்டா?

நான் யோசிக்காமல் இருக்கவே மாட்டேன். எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பேன். வேலையில்லாத போது, பயணத்தின் போது, எனக்கு தோன்றும் சிலவற்றை எழுதுவேன். அப்போது கவிதை, கதை என, எதுவேண்டுமானாலும் வந்து கொட்டும். எதிர்காலத்தில் இயக்குனர் ஆனாலும் ஆகலாம்.

விஜயுடன் நடித்த அனுபவம்?

அவருடன் இரண்டு படங்களில் நடித்து விட்டேன். மிகவும் இனிமையானவர்; அவர் மிகவும் எளிமையாக இருப்பார். அடுத்தவரை மதிக்கக்கூடியவர். அடுத்த படம் குறித்து, ஆவலாக விசாரிப்பார்.

அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?

தெரியவில்லை; அது நடக்கும் போது நடக்கும்.

எந்த நடிகருடன் நடிக்க ஆசை?

விஜய்சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை.

நன்றாக சமைப்பீர்களாமே?

சமைப்பது பிடிக்கும். நான் சமைத்தால் நன்றாக இருக்கும் என வீட்டில், எல்லாரும் சொல்வது உண்டு. என் கை பக்குவத்தில், ஏது சமைத்தாலும் நன்றாக இருக்கும்.

திரைத்துறை பற்றி உங்கள் கருத்து…

ஆசைப்பட்டு தான், சினிமாவில் நடிக்க வந்தேன். ஆனால், எதையும் எதிர்பார்த்து வரவில்லை. என் பெற்றோரால் தான், எனக்கு சினிமாவில் அறிமுகம் கிடைத்தது. அதன் பின், கடவுள் கருணையால், தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.

Sharing is caring!