தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியிலுள்ள ஆடம்பர விடுதியில் நடந்துள்ளது

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியிலுள்ள ஆடம்பர விடுதியில் நடந்துள்ளது.

இருவரையும் வாழ்த்தி சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர் இணைந்து பஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய பெரும் வெற்றிபெற்ற திரைப்படங்கள் உட்பட மூன்று படங்களில் நடித்துள்ளனர்.

இருவரும் இணைந்து கடந்த ஆண்டு மட்டும் சுமார் 21 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013ஆம் ஆண்டு இருவரும் இணைந்து நடித்து வெளியான முதல் திரைப்படமான கோலியான் கி ரஸ்லீலா ராம்-லீலா வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டான நேற்று (14) இவர்களது திருமணம் நடைபெற்றது.

இத்தாலியிலுள்ள ஆடம்பர விடுதியொன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. எனவே, திருமணத்திற்கு முன்னதாக இவர்கள் எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படங்கள் தற்போது ஊடகங்களில் உலாவி வருகின்றன.

தங்களது திருமணத்தில் பங்கேற்பவர்கள் அதுகுறித்த தகவல்களை பொதுவெளியில் பகிர வேண்டாமென தம்பதிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இருந்தபோதிலும், பாலிவுட் பாடகர் ஹர்ஸ்தீப் கவுர் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்த புகைப்படமொன்றை பகிர்ந்த சில நிமிடங்களில் நீக்கிவிட்டார். அவர் நீக்குவதற்குள் பலர் அதை திரைப்பிடிப்பு எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்துவிட்டனர்.

தீபிகாவும், ரன்வீரும் காதலித்து வருவதாக கடந்த 6 வருடங்களாகக் கூறப்பட்டு வந்தாலும், இந்தாண்டின் தொடக்கத்தில் தான் இருவரும் அதை உறுதி செய்தனர்.

Sharing is caring!