துறைமுகத்துக்குள் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கக் கூடாது

தமிழ்ப்படங்களில் வட சென்னையை தவறாகச் சித்தரித்ததால், இனிமேல் துறைமுகத்துக்குள் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று காசிமேடு துறைமுக மேலாண்மைக் குழுவிடம் மீனவர்கள் கோரிக்கை கடிதம் அளித்துள்ளனர்.

காசிமேடு துறைமுகத்தில் 6 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட வடசென்னை படத்தில் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் அப்பகுதி மக்கள் பற்றி மோசமாக சித்தரிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும்கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் சாம்பியன் படத்தின் படப்பிடிப்புக்காக துறைமுகத்துக்கு படக்குழுவினர் வந்தனர். அவர்களை உள்ளே நுழையவிட மறுத்த மீனவர்கள், அங்கே படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

வடசென்னை குறித்தும் மீனவர்கள் பற்றியும் தவறான விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லை என்று சுசீந்திரன் கடிதம் கொடுத்த பிறகே படப்பிடிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, சாம்பியன் படத்தில் வடசென்னை மக்களைத் தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இல்லை என்றும் படத்தில் வட சென்னை மக்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகே அப்பகுதி மக்கள் சமாதானமடைந்தனர். படப்பிடிப்பு நடத்தவும் அனுமதியளித்தனர். அதுமட்டுல்ல, கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக படப்பிடிப்பில் ஏதேனும் தவறான காட்சிகள் படமாக்கப்படுகிறதா என்றும் அப்பகுதி மக்கள் கண்காணித்துள்ளனர்.

Sharing is caring!