தூக்கில் தொங்கிய நடிகையின் கடைசி கடிதம்..!

சென்னை பெரவள்ளூரில் தூக்கில் தொங்கிய துணை நடிகை யாஷிகா, இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், `என் மீது அன்பாக இருக்க மாட்டாயா என்றும் நீ என்னை வாழ விடமாட்டாயா’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி, 22வது தெருவில் குடியிருந்தவர் மேரிஷீலா மரியாராணி என்கிற யாஷிகா (21). திருப்பூரைச் சேர்ந்த இவர் டிவி தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் விமல் நடித்த `மன்னர் வகையறா’ என்ற படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு துணை நடிகை யாஷிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் பெரவள்ளூர் பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று யாஷிகாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். துணை நடிகை யாஷிகா இறந்த தகவலை அவரின் அம்மா எஸ்தருக்கு பொலிசார் தெரிவித்தனர். உடனடியாக அவர், சென்னை வந்தார்.

தாயார் கூறுகையில்:

அவரிடம் பேசினோம். “எனக்கு இரண்டு மகளும் ஒரு மகனும் பிறந்தனர். எங்களைவிட்டு யாஷிகாவின் அப்பா பிரிந்து சென்றுவிட்டார். நான் தான் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தேன். யாஷிகாவுக்கு சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால்தான் படிப்பு முடிந்ததும் சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தார். தனியாக சென்னையில் அவர் குடியிருந்தார். தினமும் போனில் என்னுடன் பேசுவார்.

சினிமாவிலும் டிவி தொடர்களிலும் நடித்து கைநிறைய சம்பாதித்தார். ஆனால், அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியவில்லை. பொலிசார் சில காரணங்களைச் சொல்கின்றனர். இனிமேல் எப்போது யாஷிகாவை நான் பார்ப்பேன்’’ என்றார் கண்ணீர்மல்க

பொலிசார் கூறுகையில்:

இது குறித்து பொலிசாரிடம் கேட்டபோது, “வடபழனியில் துணை நடிகை யாஷிகா தங்கியிருந்தபோது பெரம்பூரைச் சேர்ந்த வாலிபர் அங்குள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்தான் யாஷிகா பெரவள்ளூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் தற்கொலைக்கு காரணம் என யாரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அவருடன் தங்கியிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்கொலை செய்த யாஷிகா தங்கியிருந்த வீட்டில் நடத்திய ஆய்வில்தான் அவர் எழுதிய டைரி கிடைத்தது. அவரின் செல்போனையும் ஆய்வு செய்துவருகிறோம். இதற்கிடையில் துணை நடிகை யாஷிகா, தற்கொலைக்கு முன் அவரின் அம்மாவுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியதாக தகவல் வெளியானது. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றார்.

கடிதம் எழுதிய யாசிகா.

யாஷிகாவின் அம்மா எஸ்தருக்கு உதவிய வழக்கறிஞர் தமிழ்வேந்தனிடம் கேட்டதற்கு, “துணை நடிகை யாஷிகா தற்கொலையில் சில உண்மைகள் மறைந்திருக்கின்றன. அதாவது, சினிமாவில் கைநிறைய சம்பாதித்தப் பணத்தில் யாஷிகாவுடன் அந்த வாலிபர் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார். யாஷிகா எழுதிய டைரியில் `என்னை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டிக்கிறாய், என்னை ஏன் டார்ச்சர் பண்ணுகிறாய், உன்னை நம்பிதானே நான் வந்தேன். நீ ஏன் என்னை வாழ விடவில்லை’ என்று கறுப்பு மையில் எழுதியிருந்தார்.இதுதான் துணை நடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. துணை நடிகை யாஷிகாவுடன் தங்கியிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி அவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.

துணை நடிகை யாஷிகா தற்கொலை குறித்து பெரவள்ளூர் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் அவர் தங்கியிருந்த வீட்டின் அறைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பாக அவருடன் தங்கியிருந்தவரிடம் விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து யாஷிகாவின் சடலம் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்குக் கொண்டு செல்லாமல் சென்னையிலேயே யாஷிகாவின் சடலத்தை உறவினர்கள் தகனம் செய்தனர். தற்போது துணை நடிகை யாஷிகா குடியிருந்த வாடகை வீட்டில்தான் அவரின் உறவினர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களிடம் இன்று மாலை மீண்டும் பொலிசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு இந்த வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!