தெலுங்கில் எடுத்து தமிழ் ஆடியோ இணைப்பு… தமிழ் ராக்கர்ஸ்சின் டெக்னிக்

சென்னை:
2.0 படத்தை திருட்டுத்தனமாக தெலுங்கில் எடுத்து தமிழ் ஆடியோவை இணைத்துள்ளனர் தமிழ் ராக்கர்ஸ்.

தயாரிப்பாளர்கள் சங்க கெடுபிடி காரணமாகவும், நீதிமன்ற உத்தரவு காரணமாகவும் தமிழகத்தில் உள்ள எந்த தியேட்டரிலும் ஒரு திரைப்படத்தை வீடியோ எடுப்பது என்பது முடியாத காரியம். ஆனாலும் நேற்று இரண்டு காட்சிகள் முடிவதற்குள்ளே ‘2.0’ திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது அனைவரையும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தமிழ் ராக்கர்ஸ் செயல்படுத்தியுள்ள டெக்னிக்கை அம்பலப்படுத்தியுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் திரையிடும் தியேட்டரில் வீடியோ எடுத்துவிட்டு, தமிழில் வெளியிடும் தியேட்டரில் ஆடியோவை பதிவு செய்துவிட்டு பின் இரண்டையும் சேர்த்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஒரு திரைப்படத்தை வீடியோ எடுக்க தமிழ்நாட்டு தியேட்டரில்தான் கெடுபிடி இருக்கிறதே தவிர, ஆந்திராவில் மிக எளிதாக வீடியோ எடுக்கலாம். அந்த வீடியோவில் உள்ள தெலுங்கு ஆடியோவை நீக்கிவிட்டு தமிழில் செல்போன் அல்லது வேறு கருவிகளில் திருட்டுத்தனமாக எடுத்த ஆடியோவை இணைத்துவிட்டால் போதும் என்பதுதான் தமிழ் ராக்கர்ஸின் டெக்னிக். ஒரு டெக்னாலஜியை ஒரு தவறான விஷயத்திற்காக இவ்வளவு தூரம் யோசித்து செயல்படுத்துவதால்தான் இன்னும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை யாரும் நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சர்கார் படத்தையும் இப்படிதான் செய்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!