நடனமாடிய பெண்ணை தாக்கிய டார்லிங்-2 இயக்குநர்!

சென்னை தேனாம்பேட்டை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நடனமாடிய பெண்ணை டார்லிங்-2 திரைப்பட இயக்குநர் சதீஷ் சந்திரசேகர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் சௌமியா (28). கணவரை இழந்த சௌமியா தற்போது அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சௌமியா நேற்று, சென்னை தேனாம்பேட்டை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள  நட்சத்திர விடுதிக்கு சென்று மதுபோதையில் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு இருந்த டார்லிங் 2 திரைப்படத்தின் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரும், அவரது நண்பர்கள் இருவரும் சௌமியாவின் அருகே சென்று அவரை, தங்களுடன் நடனமாடும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு சௌமியா மறுக்கவே கோபத்தில் சதீஷ் சந்திரசேகர் சௌமியாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதில் பாதி போதை தெளிந்த சௌமியா, உடனே சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நட்சத்திர விடுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேலும், அந்த நட்சத்திர விடுதியில் இது போன்று அடிக்கடி தகராறு ஏற்படுவதால், அங்கு இயங்கி வரும் பார் இரவு 2 மணிக்கு மேல் செயல்படக் கூடாது என போலீஸ் தரப்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Sharing is caring!