நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில் அதிரடிச் சோதனை

பிரபல கன்னட திரைப்பட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில், வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று (ஜன. 03) அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கன்னட திரையுலகின் பிரபல நடிகர்களான, பெங்களூரில் வசிக்கும், சிவ ராஜ்குமார், புனித் ராஜ்குமார், யாஷ், சுதீப் ஆகியோரது வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (ஜன. 03) சோதனை நடத்தினர்.

சினிமா தயாரிப்பாளர்கள், ராக்லைன் வெங்கடேஷ், சி.ஆர்.மனோகர், விஜய் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹாட்ரிக் ஸ்டார் என்ற பெயரில், 23 இடங்களில் நடந்த சோதனையில், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கி உள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான, சிவ ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் ஆகியோர், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார், ராஜ்குமாரின் மகன்கள். நடிகர் சுதீப், தமிழில் வெளியான, நான் ஈ படத்தில் நடித்தவர். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரஜினியின் நெருங்கிய நண்பர். நேற்று (ஜன.03) நடந்த இந்த சோதனையால், கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sharing is caring!