நடிகர் G. V. பிரகாஷ், விமல் உள்ளிட்டோர் களத்தில்

கஜா புயலால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு உதவும் வகையில், நடிகர் G. V. பிரகாஷ், விமல் உள்ளிட்டோர் களத்தில் இறங்கியுள்ளனர்.

கஜா புயல் தமிழகத்தின் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது. அங்கு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம். அதனால் அதிக அளவில் நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன.

திரைத்துறையை சேர்ந்த நடிகர்களில் சிலர் நிவாரண நிதி அறிவித்தனர். சில நடிகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.

நடிகர் கமல் ஹாசன் 2 நாட்கள் பயணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். இரவு பகல் பாராமல் பணியாற்றுபவர்களுக்கு நேரில் சந்தித்து பாராட்டுகள் தெரிவித்தார்.

நடிகை கஸ்தூரி நீர் சுத்திகரிப்பு சாதனங்களோடு நேற்று இரவு தஞ்சை மாவட்டத்திற்கு சென்றார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தனது குழுவுடன் பார்வையிட்ட G. V. பிரகாஷ், தென்னைப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு அணுகுமாறு இரண்டு எண்களை அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மணலின் தரத்தை ஆய்வு செய்து, குறுகிய காலப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரிகிறது. பல இலட்சக்கணக்கான மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. மின்சாரம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். அரசு, சமூக ஆர்வலர்கள் எல்லாரும் வேலை செய்து வருகின்றனர். எவ்வளவு வேலை செய்தாலும் போதாது. நிலைமையை மீண்டும் பழையபடிக்கு கொண்டுவரப் பல மாதங்கள் ஆகும்.

இங்கு இலட்சக்கணக்கான தென்னை மரங்களும் தேங்காய்களும் வீழ்ந்து கிடக்கின்றன. இதுதான் நேரம் எனப் பார்த்து, வியாபாரிகள் குறைவான விலைக்குப் பொருட்களை வாங்க முயன்று வருகின்றனர். இது தவறான வி‌டயம். வழக்கமான சந்தை விலைக்கே வியாபாரிகள் வாங்க வேண்டும்.

அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். உலகத்திற்கே சோறு போட்ட இடம் டெல்டா. இந்த மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த வி‌டயம் சந்தை விலையில் தேங்காயை வாங்கி உதவுவதே.

இளநீரை மொத்தமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யவுள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து இளைஞர்களையும் மாணவர்களையும் கவனித்து வருகிறேன். தன்னார்வமாகப் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், மக்களுக்கு நல்லது செய்ய அதிகமாகக் களத்திற்கு வருகிறார்கள். இதுபோன்ற தன்னார்வமுள்ள இளைஞர்கள், மாணவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.

என கூறியுள்ளார்.

இதேவேளை, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் விமல் பார்வையிட்டார். அவர் பயின்ற பன்னாங்கொம்பு கிராமத்தில் உள்ள பாடசாலையில் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்ததுடன், அங்கு பணியாற்றி வரும் மின் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடும் பாதிப்பிற்குள்ளான 4 மாவட்டங்களில் மீட்புப் பணிகளை விரைந்து செய்ய மற்ற மாவட்ட இளைஞர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். இங்கு எல்லோருமே ஆடு, மாடு, மரங்களை இழந்து நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில், கைவிடப்பட்டது போல் இருக்கிறார்கள். நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்

என வலியுறுத்தியுள்ளார்.

ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் போன்றோர் தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். விஜய்யும் சூர்யாவும் அடிக்கடி தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கள விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.

Sharing is caring!