நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இயக்க, விஜய் நடிக்க ‘பகலவன்’ என்ற படம் ஒன்று உருவாகப் போவதாக கடந்த சில வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அது பேச்சோடு முடிந்துவிட்டது என்பது இப்போது சீமான் பேசியுள்ளதில் இருந்து தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோரைக் கிண்டலடிக்கும் வகையில் பேசினார். குறிப்பாக விஜய் பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். ‘சர்கார்’ படத்திற்கு பிரச்சினை வந்த சமயத்தில் ஆளும் அரசை எதிர்க்காமல் விஜய் கைகட்டி பேசியதாகவும், என் படத்தில் அவர் நடிக்க மாட்டார்.

ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பார் என ஓவராகவே கேலி பேசினார். அதோடு, ரஜினி, கமல் போன்றவர்கள் பொட்டல்காட்டில் கம்பு சுற்றுபவர்கள் என்றும், தான் பலரிடமும் கதை சொன்னதாகவும், அவர்கள் அனைவருமே நடிக்கத் தயங்கியதாகவும், சிம்பு மட்டுமே தைரியமாக நடிக்க சம்மதித்ததாகவும் சொன்னார்.

“சிம்புதான் அடுத்த சூப்பர் ஸ்டார், தீபாவளிக்கு வெளியிடுகிறோம் படத்தை. அவனவன் நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்துடுவாங்க பாருங்க. அடுத்தடுத்து ரெண்டு பேரும் மூணு படம் பண்ணப் போறோம்,” என்றார் சீமான்.

சீமானின் பேச்சுக்கு நேற்றே விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். டுவிட்டரில் சீமானை தரக்குறைவாக ஒரு வார்த்தையை வைத்து ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதை உலக அளவில் டிரென்டிங் செய்தனர். மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் எதிரில் சீமான் கைகட்டி அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பதிலுக்கு சீமானைக் கிண்டலடித்தனர்.

Sharing is caring!