நேரத்தை வீணாக்காதீங்க….கடுப்பான கமல்

வாரா வாரம் சர்வாதிகாரி டாஸ்க் வைத்தால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றுகிறது. எந்த பிரச்னையும் இல்லாததால் ஒரு புது பிரச்னையை தேடி கண்டுப்பிடித்து, பிக்பாஸின் விருப்பப்படி அதனை கமலே விளக்குவதை பார்க்க ‘ஙே’ என்று இருக்கிறது. பின்னர் அந்த பிரச்னையில் எந்த உண்மையும் இல்லை என்றதும், டோன்ட் வேஸ்ட் மை டைம் என கமல் கடுப்பாக்கிறார். அதே உணர்வு தான் நமக்கும் ‘டோன்ட் வேஸ்ட் அவர் டைம் பிக்பாஸ்’.

55வது நாள் என்ன நடந்தது?

முன்னரே எதிர்பார்த்தது போல மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நிகழ்ச்சியை தொடங்கினார் கமல்ஹாசன். பின் தான் எழுதிய கவிதையை கருணாநிதி ஒருமுறை படித்து காட்டினார் என்று பெருமையாக பேசிக்கொண்டு இருந்தார். அட… உண்மைதாங்க என அதற்கு ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. என்ன இது தற்பெருமை பேசிட்டு இருக்காரு என்று, நாம் நினைப்பதற்குள் அவரே அதனை கூறிவிடுகிறார். இது போன்ற சம்பவங்களை யார் தான் சொல்லாமல் இருப்பார் என்று அப்பாவியாக கேட்டார் கமல். அந்த காணொளி முடிவில் கண்கலங்கி நின்றார்.

பின்னர், 55ம் நாள் என்ன நடந்தது என்பதை காட்டினார்கள். செல்ஃபி புள்ள பாடலோடு அன்றைய நாள் தொடங்கியது. சென்றாயனை பாடாய் படுத்திய பாடல்!

கோதுமை சப்பாத்தி தயார் செய்து வெச்சிருக்கோம், வந்து சாப்பிடுங்க என்று மும்தாஜிடம் கூறினார் டேனி. எனக்கு கோதுமை அலர்ஜி என்று கூறிவிட்டு சென்றார் மும்தாஜ். அவர் சென்றதும், “அது தான் மாமா… கோதுமை வாங்க சொன்னது. இப்போ அலர்ஜினு சொல்லுது. கமல்  சார் கிட்ட மாட்டி விட போறேன்” என ஸ்கூல் பிள்ளை போல சென்றாயனிடன் புகார் கூறினார் டேனி.

கடந்த வாரம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்த பின் பலரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாக பாலாஜி பேசிக்கொண்டு இருக்கையில், அன்றைய தினம் முடிந்தது.

பின்னர் அகம் டி.வி வழியே போட்டியாளர்களை சந்தித்தார் கமல். இந்த முறை எவிக்‌ஷனை வித்தியாசமாக செய்யலாம் என்று தொடக்கமே வெளியேற்றம் என்றார். அப்படியெல்லாம் செய்தால் எவிக்‌ஷன் முடிந்ததும் டி.வியை ஆஃப் செய்துவிட்டு சென்று விடுவார்கள் என்று பிக்பாஸுக்கு தெரியும், அதனால் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. வெறும் பேச்சுக்கு தான்!

முன்னதாக நடந்த புகார் பெட்டி டாஸ்கில் மொட்ட கடுதாசி ஒன்று வந்திருந்ததாக கமல் கூறினார். அதில், “பொன்னம்பலம் இன்னும் பெண்களை பற்றி தவறாக தான் பேசிக்கொண்டு இருக்கிறார். என்னை பற்றியும் மற்றவர்களிடம் தவறாக கூறியுள்ளார்” என்று எழுதப்பட்டு இருந்தது. முதலில் யார் எழுதுனது சார் என்று கேட்ட டேனி, பின்னர் நான் தான் என்றார். அந்த கடிதம் குறித்து கமல் கேட்டார். “சும்மா மத்தவங்கள செக் பண்ணுவதற்காக தான் அப்படி செய்தேன்” என மழுப்பினார் டேனி. அப்போ இந்த கடிதம் எதற்கு என்று தூக்கி வீசினார் கமல்.

பொன்னம்பலம் மீது முன்பு வருத்தம் இருந்ததாகவும், பின்னர் சரியாகி விட்டதாகவும் கூறினர் டேனியும் மகத்தும்.

பின்னர் “5 நிமிஷம் கொடுத்தா, இந்த வீட்டில் இருப்பவர்களின் முகத்தை கிழிச்சி போடுவேன்” என்று முன்னர் வைஷ்ணவி கூறியிருந்ததை நினைவுப்படுத்தி “எங்க கிழிங்க” என்றார் கமல். அந்த வாய்ப்பை வைஷ்ணவி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அப்படி செய்து தான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தொடங்கி 1 நிமிடத்திற்கு நீண்ட விளக்கம் அளித்தார் வைஷ்ணவி.

வைஷ்ணவி இன்னும் திருந்தவே இல்லை என்று தானாக முன்வந்து கருத்து கூறினார் சென்றாயன். பின் இந்த உரையாடல், பாத்ரூம்
சுத்தம் செய்வது பற்றி நகர்ந்தது. மும்தாஜ் இதுவரை பாத்ரூமை சுத்தம் செய்ததே இல்லை என்று சென்றாயன் கூறினார். தனது உடல்நிலை தான் அதற்கு காரணம் என்று விளக்கினார் மும்தாஜ். அவரின் உடல்நிலை அறிந்து தான் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்திருப்பார்கள், அப்படி இருக்கையில் அவரால் செய்ய முடியாத விஷயங்கள் குறித்து அடிக்கடி மற்ற போட்டியாளர்கள் பேசுகின்றனர். இதனால் மருத்துவ ரீதியாக தனக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து மும்தாஜ் தொடர்ந்து விளக்கி கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

“அன்னைக்கு பானை மேல ஏறி நடந்தாங்ளே” என்று கேட்டார் கமல். இதற்கு முன் நடந்த டாஸ்க்கில், பானையை தலையில் வைத்து கொண்டு நடந்தார் மும்தாஜ். அதை தான் கமல் அப்படி கூறினார். பானையை தலையில் வைத்துக்குகொண்டு நடப்பதற்கும், குனிந்து வேலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது  ஆண்டவரே.

பிரெக் முடிந்து வரும் போது எல்லோரும், ‘எனக்குள் ஒவருன்’ டாஸ்க்கின் போது அணிந்த டி.ஷர்ட்டை அணிந்துக்கொண்டு வாருங்கள் என்று கமல் கூறியப்படியே வந்தார்கள். பிரேக் முடிந்து போட்டியாளர்களை சந்திக்கும் முன்னர், இவங்க ரொம்ப டூப்பா இருக்காங்க என்று பார்வையாளர்களிடம் கூறினார் கமல்.

அகம் டிவி வழியாக வந்ததும், இனி இது போன்று மொட்ட கடுதாசியெல்லாம் எழுதி என் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கண்டித்தார் கமல். மேலும், “நான் உங்கள் மீது அக்கறை வைத்திருக்கிறேன். இது போன்று மீண்டும் நடந்தால், இனி எதைப்பற்றியும் நான் கேட்க போவத்தில்லை. நீங்கள் ஜெயிப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நான் ஜெயித்ததனால் வந்திருக்கிறேன்” என்றார். இந்த போட்டியாளர்கள் 24 மணி நேரமும் கேமராக்கள் தங்களை கண்காணிப்தை அறிந்தும் பொய்யாக சிலவற்றை கூறும் போது பார்க்க கோபம் வரதான் செய்கிறது. கமலின் இந்த காட்டத்திலும் நியாயம் உள்ளது.

அதன் பின்னர் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் எந்த கதாபாத்திரத்தில் இருக்கிறார்களோ அவர்களை போலவே பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொருவராக கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் தன்னை போல மற்றவர் சரியாக செய்யவில்லை என்று சிலர் கூறிக்கொண்டு இருந்தனர்.  ஜனனி தன்னை போல மிக சரியாக செய்தார் என்று கூறினார் சென்றாயன்.

டேனி மற்றவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து பேசுவது போல யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் கூடதான் பேசிக்கொள்கிறார்கள் என்று பின் வரும் தலைப்புக்கு லீட் எடுத்தார் கமல். அதன் வழியாக மற்றவர்களின் மனதை புண்படுத்துவது பற்றி பேசி கடைசியாக யாஷிகா மற்றும் மகத்தின் பிரச்னைக்கு வந்தார். நேற்றைய நிகழ்ச்சியின் சிறந்த பகுதியும் அதுவே.

அவர்கள் உறவு குறித்து பேசும் போது, “எனக்கு தெரில சார். வெளியே நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். யாஷிகாவை பிடிக்கும்” என்றார் மகத்.

பின்னர், “நான் மகத்தை காதலிக்கிறேன். ஆனால்அவர் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. இதில் இருந்து வெளியே வர என்னால் முடியும்” என்றார் யாஷிகா. அவர் எல்லா விஷயங்களிலும் தெளிவாக இருப்பதை பார்க்க ஆச்சரியமாக தான் இருக்கிறது. இந்த வயதில் அபாரமான மனவலிமையை கொண்டு இருக்கிறார் யாஷிகா.

பின், இதை என்னால் கேள்வி கேட்க முடியாது. உங்கள் இருவரையும் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் இதனை கடந்து தான் வந்திருக்கிறேன் என்றார் முன்னாள் காதல் மன்னன். நாளைக்கு வந்து எவிக்‌ஷனை பத்தி பேசுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

எப்போதும் வாரம முழுக்க போர் அடித்தாலும், சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சிகள் கமலின் வருகையால் சுவாரஸ்யமாக இருக்கும். நேற்றைய நிகழ்ச்சியில் கமல் இருந்தும் எந்த விறுவிறுப்பும் இல்லை. நல்ல கதையுடன் தொடங்கிய சீரியல் பாதியில் கதையில்லாமல் போவது போல இருக்கிறது நிகழ்ச்சி. பிக்பாஸ் கத்துக்கிட்ட பாடத்தை மொத்தமாக இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

Sharing is caring!