நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனிற்கு சூர்யா உதவி

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பரிசு கொடுத்த சூர்யா அந்த சிறுவனின் கல்வி மற்றும் மருத்துவ செலவை ஏற்றுள்ளார்.

தமிழகத்தின் தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிறுவன் தினேஷ் குமார் (16) தனது 10 ஆவது வயதில் திடீரென கீழே வீழ்ந்து, எழுந்து நிற்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

தினேஷ் குமாருக்கு தசைச்சிதைவு நோய் இருப்பதும், அந்த நோய்க்கு சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் இல்லாததும் தெரிய வந்தது. தசைகள் எல்லாம் சிதைந்து போன நிலையில், சக்கர நாற்காலியிலேயே இன்று வரை வாழ்நாளைக் கழித்து வருகிறார்.

தனக்குத் தெரிந்த ஓவியத் திறமை மூலம் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் பல வகை ஓவியங்களை வரைய ஆரம்பித்து, தற்போது அனைத்து விதமான காட்சிகளுக்கும் உருவம் கொடுத்து வருகிறார்.

தன்னுடைய கனவு நாயகன் சூர்யாவைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.

அதைப் பார்த்த சூர்யா ரசிகர் மன்றத்தினர் இந்தத் தகவலை சூர்யாவிடம் எடுத்துச்சென்றனர். சூர்யாவும், அவரது தம்பியும், நடிகருமான கார்த்தியும் சிறுவன் தினேஷைப் பார்க்க விரும்பினார்கள்.

சூர்யா சிறுவனை குடும்பத்துடன் தனது சென்னை வீட்டிற்கு வரவழைத்தார். நேற்று (19) காலை சென்னை தி.நகரில் உள்ள சூர்யா இல்லத்திற்கு வந்த தினேஷிற்கு நடிகர் சிவக்குமார், தான் வரைந்த ஓவியம் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

தினேஷிற்கு ஏற்பட்ட நோய் குறித்துக்கேட்டறிந்த சூர்யா, அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பினார். அவரது கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

Sharing is caring!