படம் கைவிடப்பட்டது…அதிர்ச்சியில் வர்மா பட நாயகி

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான “வர்மா” எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி தரவில்லை என்றும், அதன் காரணமாக அதனை கைவிட்டதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பது குறித்து தனக்கு தெரியாது என்று அப்படத்தின் நாயகி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் செய்வது என தயாரிப்பு நிறுவனமான E4 Entertainment நிறுவனம் முடிவு செய்து இயக்குனர் பாலாவிடம் ஒப்படைத்தது. விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக வைத்து பாலாவும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். கடந்த 4 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், வேறு இயக்குநர் மற்றும் வேறு நடிகர்களுடன் படப்பிடிப்பை மீண்டும் புதிதாக நடத்தவுள்ளதாக நேற்று அறிவித்தது.

ஆனால் இதுகுறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று இப்படத்தின் நாயகி மேகா தெரிவித்துள்ளார். நேற்று தனது பிறந்தநாள் என்றும் இதுகுறித்து தனக்கு யாரும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!