பயணத்தின்போது நடைபெற்ற நிகழ்வு – பகிர்ந்துள்ளார் மம்முட்டி

எவ்வளவு தான் பிரபலமாகிவிட்டாலும் சிலருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல நடந்திருக்கும். அந்தவகையில் நடிகர் மம்முட்டி, சில ஆண்டுகளுக்கு முன் தனது பயணத்தின்போது நடைபெற்ற நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒருமுறை நள்ளிரவு அவர் காரை தானே ஓட்டிக்கொண்டு பயணித்தபோது, திடீரென காரின் குறுக்கே ஒரு முதியவர் கைகளை ஆட்டிக்கொண்டே ஓடி வந்தாராம். அவர் மீது மோதாமல் இருக்க, சாமர்த்தியமாக காரை பிரேக் பிடித்து நிறுத்திய மம்முட்டி, அவரை சத்தம் போடுவதற்காக கீழே இறங்க, அவரோ அருகில் சாலையோரத்தில் மயக்க நிலையில் பிரசவ வேதனையுடன் துடித்துக் கொண்டிருந்த தனது பேத்தியை காண்பித்து கை கூப்பினாராம்.

நிலைமையை உணர்ந்த மம்முட்டி, அந்த பெண்ணை காரில் ஏற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கிளம்ப தயாரானார். அப்போது நடந்தது தான் ஹைலைட்டான விஷயம். அந்த பெரியவருக்கு மம்முட்டியை யாரென்று தெரியவில்லை. அவரிடம் உங்கள் பேர் என்ன என கேட்க மம்முட்டி என கூறியுள்ளார்.

அப்போதும் அவர் ஒரு நடிகர் என்பதை உணர்ந்திராத அந்த பெரியவர், தனது வேட்டியில் சுருட்டி வைத்திருந்த ரூபாய் நோட்டு ஒன்றை மம்முட்டியிடம் கொடுத்து, தன்னிடம் இவ்வள தான் இருக்கிறது என கூறினாராம். தான் சம்பளமாக வாங்கிய பல லட்சங்களை விட அந்த இரண்டு ரூபாய் நோட்டை மிகப்பெரிய வாழ்க்கை அனுபவமாக, பொக்கிஷமாக நினைத்த மம்முட்டி தற்போது வரை அதை பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம்.

Sharing is caring!