பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக ‘அரவிந்த சமேதா’ படத்தின் வெற்றி விழா

தெலுங்குத் திரையுலகத்தில் எந்த அளவிற்கு வாரிசு நடிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு வாரிசு மோதல்களும் இருக்கிறது. என்டிஆரின் மூத்த மகனான ஹரிகிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியின் மகனான ஜுனியர் என்டிஆர், தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். ஜுனியர் என்டிஆருக்கும் அவருடைய சித்தப்பா பாலகிருஷ்ணாவுக்கும் பல வருடங்களாகவே பேச்சு வார்த்தை இல்லை.

சமீபத்தில் ஜுனியர் என்டிஆரின் அப்பா ஹரிகிருஷ்ணா விபத்தொன்றில் உயிரிழந்தார். அதையடுத்து பாலகிருஷ்ணா, ஜுனியர் என்டிஆர் இடையிலான பகை மறைந்துவிட்டது.

நேற்று ஜுனியர் என்டிஆர் நடித்த ‘அரவிந்த சமேதா’ படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, ‘என்னைப் போலவும், ஜுனியர் என்டிஆரைப் போலவும் வேறு யாராலும் நடிக்க முடியாது. எங்களிடமிருந்து வாழ்க்கையிலிருப்பதை விட பிரம்மாண்டமான படங்களையும், கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜுனியர் என்டிஆர், “நாங்கள் எங்களது அப்பாவை இழந்துவிட்டோம். ஆனால், சித்தப்பா பாலகிருஷ்ணா எங்களது அப்பாவைப் போல பார்த்துக் கொள்கிறார். இந்த விழாவிற்கு அவர் வந்ததற்கு தலை வணங்குகிறேன்,” என்றார்.

ஜுனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா இருவரும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்ததற்கு இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

Sharing is caring!