பாலாபிஷேகம் வேண்டாம்

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால், அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள், ஆள் உயர கட்-அவுட், பேனர், பாலாபிஷேகம், பீர் அபிஷேகம், மாலை என அமர்களம் செய்வார்கள். இதற்காக அவர்கள் செய்யும் செலவு ஏராளம். இது போன்று செய்ய வேண்டாம் என எந்த நடிகர்களும் பெரும்பாலும் ரசிர்களுக்கு அறிவுறுத்துவது கிடையாது. இந்நிலையில் இதுபோன்று வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டு கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். வந்தா ராஜாவாதான் வருவேன் படம், பிப்.,1ம் தேதி வெளியாகிறது. ரசிகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். பொதுவாக ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, பிளாக்கில் அதிக விலை கொடுத்து படம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தியேட்டர் கவுன்ட்டரில் என்ன விலைக்கு விற்கிறார்களோ அந்த விலைக்கு வாங்கி படத்தை பாருங்கள்.

என் படத்திற்கு பேனர், கட்-அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்ற விஷயங்கள் எல்லாம் வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் பெற்றோர்களுக்கு புடவை, வேஷ்டி சட்டை, உடன் பிறந்தவர்களுக்கு இனிப்புகள் என ஏதோ உங்களால் முடிந்ததை வாங்கி கொடுத்து, அதை போட்டோவாகவோ, வீடியோவாக பகிருங்கள். அந்த சந்தோஷமே போதும். பேனர், கட்-அவுட் வைத்து தான் மாஸ் காண்பிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நான் நன்றாக நடித்து உங்களின் பெயரை காப்பாற்ற வேண்டும், அதை நான் செய்கிறேன். எனக்காக இதை நீங்கள் செய்யுங்கள், இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

Sharing is caring!