புகழை தமிழ் சினிமாவில் சரியாகப் பயன்படுத்திய ரைசா

விஜய் டிவியில் 2017ம் ஆண்டில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் 1, நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அந்த சீசனில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியவராக நடிகை ஓவியா இருந்தார். ஆனால், அவர்களைக் காட்டிலும் ‘பிக் பாஸ்’ புகழை தமிழ் சினிமாவில் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் ரைசா வில்சன் மட்டுமே.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் ஒரு மாடல் என்ற அறிமுகத்திலேயே கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது அவர் ஒரு சிறு வேடத்தில் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் வெளிவந்தது. தியேட்டரில் அவரது வருகைக்குக் கூட ரசிகர்கள் கைதட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள்.

அந்தப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் கடந்த வருடம் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நாயகியாக நடித்தார் ரைசா. அந்தப் படமும் வெற்றிப் படமாக அமைந்ததால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத் துவங்கின.

அடுத்த மாதம் வெளிவர உள்ள பாலா இயக்கிய ‘வர்மா’ படத்திலும் ரைசா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்து யுவன் தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் ஜோடியாக மேலும் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

‘பிக் பாஸ்’ சீசன் 1 வெற்றியாளர் ஆரவ் நாயகனாக நடித்து வரும் படம் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா நாயகியாக நடித்துள்ள ‘காஞ்சனா 3’ ஏப்ரல் மாதம்தான் வெளியாக உள்ளது. அவர்களுக்கு முன்னதாகவே ரைசா வில்சன் தமிழ் சினிமாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிந்தைய புகழை, ஒரு சரியான அறிமுகமாக ஏற்படுத்திக் கொண்டார்.

Sharing is caring!