பூதமாக நடித்தது இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது

குணசித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றவர் அசோகன். அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் பூதமாக நடித்தது இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் படம் என்றால் வில்லனாகவோ அல்லது குணச்சித்ர நடிகராக அசோகன் இருப்பார். எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு அழைத்தும் வராத ஒரே நடிகர் அசோகன். அவர் 5 படங்களில் ஹீரோவாக நடித்திருப்பது இன்றைய இளைய சமூகத்துக்கு அவ்வளவாகத் தெரியாது.

1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். கே.சங்கர் இயக்கினார். இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அடுத்து 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி.

1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த “காட்டு ராணி”. இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். எம்.ஏ.திருமுகம் இயக்கினார். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன் ஜோடியாக வசந்தா நடித்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” தான் அசோகன் ஹீரோவாக நடித்த கடைசி படம். இதில் அவர் ஜோடியாக மணிமாலா நடித்திருந்தார். இந்தப்படம் வெற்றி பெற்ற படம். ஆனாலும் என்னவோ தெரியவில்லை. இந்தப் படத்திற்கு பிறகு அசோகன், வில்லனாகவும், குணசித்ர வேடங்களிலும் தான் நடித்தார்.

Sharing is caring!