பெயரை மாற்றிய கயல்

குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்களில் நடித்து வந்த சந்திரன் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு ரூபாய் படத்தில் நடித்தார். கயல் படமும், ரூபாய் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதன் பிறகு கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி, படங்களில் நடித்து முடித்தார் அவைகள் இன்னும் வெளிவரவில்லை. இது தவிர நான் செய்த குறும்பு, தாவு படங்களில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் ஆகியும் ஒரு குறிப்பிட்ட இடத்தை சந்திரனால் பிடிக்க முடிவயில்லை. இந்த நிலையில் தனது பெயரான சந்திரன் என்பதை சந்திரமௌலி என்று மாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.

இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனது இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள், நண்பர்கள் , பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் எனது பேரன்புமிக்க ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Sharing is caring!