பேட்ட’ படம் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூல்

2019ம் ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்கள் நான்கு தினங்கள் முன்னதாகவே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் ஜனவரி 10ம் தேதியே வெளியாகின.

இரண்டு படங்களைப் பற்றி ஆகா, ஓகோ என்று விமர்சனங்கள் வரவில்லை என்றாலும், மோசமாக இல்லை, பார்க்கலாம் என்று படம் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தால் இரண்டு படங்களின் வசூலும் தொடர்ந்து திருப்திகரமாக உள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பேட்ட’ படம் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூலைத் தாண்டியதாக சிலர் தெரிவிக்கிறார்கள். படத்தின் முதல் நாள் உலக வசூல் 35 கோடியாகவும், இரண்டாம் நாள் வசூல் 30 கோடியாகவும், மூன்றாம் நாள் வசூல் 40 கோடியாகவும் தோராயமாக வசூலித்திருக்கும் என்று கணக்கு சொல்கிறார்கள். இது உலக அளவிலான வசூல் கணக்காம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ‘பேட்ட’ படத்தின் வசூல் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை விட தினமும் 5 கோடி குறைவாகவே வசூலிப்பதாகச் சொல்கிறார்கள்.

இருப்பினும் ‘விஸ்வாசம்’ படத்திற்கு தமிழ்நாட்டைத் தவிர பெரிய வரவேற்பும், வசூலும் இல்லாததால் அந்தப் படம் இன்னும் 100 கோடியைத் தாண்டவில்லை என்கிறார்கள். இன்றைய வசூல் முடிந்தால் ‘விஸ்வாசம்’ 100 கோடியைக் கடக்கும் என்று கணக்கு தெரிவிக்கிறார்கள்.

Sharing is caring!