‘மாரி 2’ படம் அறிவிப்பு வெளியாகும்

இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘கொலவெறி’ பாடல் உலக அளவில் இருவரையும் கொண்டு போய் சேர்த்தது. அதன் பின் தனுஷ் தயாரித்த ‘எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி, தங்கமகன்’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஆனாலும், ஏதோ சில காரணங்களால் தனுஷ், அனிருத் கூட்டணி பிரிந்தது. இவர்கள் இணைந்து கடைசியாகப் பணியாற்றி ‘தங்கமகன்’ படம் வெளிவந்து மூன்று வருடங்களாகிவிட்டது.

‘மாரி 2’ படம் அறிவிப்பு வெளியாகும் போதே அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், தனுஷ், அவருடைய ஆரம்ப வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த யுவன்ஷங்கர் ராஜாசை படத்தின் இசையமைப்பாளராக நியமித்தார். ‘மாரி’ படத்தின் முதல் பாகத்தில் அனிருத்தின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

‘மாரி 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘ரௌடி பேபி’ நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது. ஒரு அதிரடியான ஆட்டம் பாடலாக இருக்கும் இந்தப் பாடல் 30 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது. இருப்பினும், ‘மாரி’ படத்து ‘டானு… டானு’ பாடலுடன் இந்தப் பாடலை ஒப்பிட்டு அனிருத் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், யுவன் ரசிகர்கள் ‘ரௌடி பேபி’ அட்டகாசமாக இருக்கிறது என பதிலடி கொடுத்து வருகிறார்கள். கமெண்ட்டுகளில் இரு தரப்பினும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

‘மாரி 2’ படத்தின் மற்ற பாடல்கள் வெளிவந்த பின் இந்த சண்டை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது

Sharing is caring!