மாலைதீவு அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் புதிய அறிக்கை

மாலைதீவு அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் புதிய அறிக்கையொன்றில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

குறித்த அறிக்கைக்கிணங்க, சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களினால் பொதுமக்கள் குத்தகைக்கு மாறாக மாலைதீவின் 50 தீவுகளை குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் போட்டியிடவுள்ள பின்புலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த சில வாரங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம், மாலைதீவு தலைவர்கள் சிலருக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குத்தகை அடிப்படையில் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமான முறையில் தீவுகள் மிகக்குறைந்த விலையில் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாக மாலைதீவின் உயர்மட்ட கணக்காய்வாளர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், 24 சுற்றுலா நிறுவனங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்ற உதவியுள்ளதாகவும் குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருசில நிறுவனங்களில் ஒப்பந்தங்களில் ஜனாதிபதி நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிங்கப்பூரின் செல்வந்தர்களில் ஒருவர் மாலைதீவு ஜனாதிபதி மற்றும் முன்னாள் உப ஜனாதிபதி ஆகியோருக்கு சொகுசு ஹோட்டல் அறைகளை பெற்றுக்கொடுத்துள்ளமை தொடர்பில் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Sharing is caring!