மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்த கமல்

தஞ்சாவூர்:
கஜா புயல் பாதிப்பால் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் சிறப்பாக பணியாற்றி வரும் மின்வாரிய ஊழியர்களை சந்தித்த கமல் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான கமல் ஹாசன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பெரியகுமுளை பகுதி பாப்பநாடு கிராமத்திற்கு சென்ற கமல், தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

சாய்ந்த தென்னை மரங்களை அகற்ற கூட இடம் மற்றும் பண வசதி இல்லை என்று மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பட்டுக்கோட்டை பகுதி, பெரியகுமுளை பகுதி வெள்ளூர் கிராமத்திற்கும் கமல் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஊரணிபுரம் என்ற இடத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய தொழிலாளர்களை கமல் சந்தித்து அவர்களின் பணிகளை பாராட்டினார். அவர்கள் ஆட்பற்றாக்குறை இருப்பதாக கமலிடம் தெரிவித்தனர். மின் தொழிலாளர்கள் கமல்ஹாசனுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை,திருத்துறைப்பூண்டி, மற்றும் நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். ஆங்காங்கே மக்கள் நீதிமய்யம் சார்பில் நிவாரண உதவிகளை கமல் வழங்கினார். நேற்று இரவு நாகையில் தங்கிய கமல் இன்று நாகை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!