முதன்முறையாக ஒரு குறும்படம் இயக்குகிறார் – வெங்டகட்பிரபு

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் பட இயக்குனர்களில் ஒருவர் வெங்கட்பிரபு. அவர், முதன்முறையாக ஒரு குறும்படத்தை இயக்கி உள்ளார். படத்தின் பெயர் மாஷா அல்லா… கணேஷா.

மும்பையில் நடந்த இந்து – முஸ்லீம் கலவரங்களை பற்றி பேசுகிறது. இந்துக்களுடன் பல ஆண்டுகளாக அமைதியாக சேர்ந்து வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் பெண் மற்றும் அவரது குழந்தைகள் திடீரென அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிடப்பட்ட கலவரங்களில் சிக்குகிறார்கள். வன்முறையில் இருந்து தப்பிக்க, தங்களுக்கே தெரியாமல் அவர்கள் ஒரு இந்து கோவிலின் கருவறைக்குள் அடைக்கலமாகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. சம்பத், டி சிவா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார்.

இதுகுறித்து வெங்கட்பிரபு கூறியதாவது: குறும்படங்கள் இயக்கி விட்டு இயக்குனராவது தான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால் நான் சினிமா இயக்கி விட்டு குறும்படம் இயக்கியிருக்கிறேன். மாஷா அல்லா கணேஷா கதை என்னை ரொம்பவே ஈர்த்தது. மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை செய்ய எனக்கு ரொம்பவே ஆசை. சென்சாருடன் சண்டை போட்டே, நிறைய விஷயங்களை சினிமாவில் சொல்ல முடியவில்லை. இதில் சென்சார் இல்லை என்பதால் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படி ஒரு தளம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சி என்றார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Sharing is caring!